கோபுரம் மீது ஏறி போராடியவர்கள் மீதான வழக்கு ரத்து

ஆண்டாள் கோவில் கோபுரம் மீது ஏறி போராடியவர்கள் மீதான வழக்கு ரத்து

Update: 2022-02-05 20:17 GMT
மதுரை
கடந்த 2017-ம் ஆண்டு நீட் தேர்வுக்கு எதிராக அரியலூர் மாணவி அனிதா தற்கொலை செய்து கொண்டார். இதையடுத்து தமிழகம் முழுவதும் நீட் தேர்வை ரத்து செய்யக்கோரி போராட்டங்கள் நடந்தன. ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில் முன்பு கல்லூரி மாணவர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தி நீட் தேர்வை ரத்து செய்யக்கோரி கோஷம் எழுப்பினர். அப்போது சில மாணவர்கள் கோவில் கோபுரம் மீது ஏறி கோஷம் எழுப்பினர். இதுதொடர்பாக சிலர் மீது ஸ்ரீவில்லிபுத்தூர் டவுன் போலீசார் வழக்குபதிவு செய்தனர். இந்த வழக்கை ரத்து செய்யக்கோரி குருராஜ், மதுரை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தார். இதனை விசாரித்து நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் பிறப்பித்த உத்தரவு வருமாறு-:
நீட் தேர்வுக்கு எதிராக மாணவர்கள் போராட்டம் நடத்தியுள்ளனர். மாணவி அனிதா தற்கொலையால் எழுந்த உணர்ச்சி பெருக்கால் இப்போராட்டம் நடைபெற்றுள்ளது. இந்த வழக்கு 2017-ம் ஆண்டு பதிவு செய்த போதிலும் இதுவரை குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படவில்லை. மேலும், போராட்டத்தின் போது மாணவர்கள் எந்தவித வன்முறையிலும் ஈடுபடவில்லை. எனவே மனுதாரர் மீதான வழக்கு ரத்து செய்யப்படுகிறது. இந்த உத்தரவு வழக்கில் சம்பந்தப்பட்ட அனைவருக்கும் பொருந்தும். இவ்வாறு நீதிபதி உத்தரவிட்டார்.

மேலும் செய்திகள்