தொழிலாளி கழுத்தை அறுத்துக்கொலை

நெல்லை தாமிரபரணி ஆற்றில் பிணமாக கிடந்த தொழிலாளி கழுத்தை அறுத்துக் கொலை செய்யப்பட்டது தெரியவந்தது. இந்த சம்பவத்தில் இறந்த விசாரணை கைதிக்கும் தொடர்பு இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

Update: 2022-02-05 20:05 GMT
நெல்லை:
நெல்லை தாமிரபரணி ஆற்றில் பிணமாக கிடந்த தொழிலாளி கழுத்தை அறுத்துக் கொலை செய்யப்பட்டது தெரியவந்தது. இந்த சம்பவத்தில் இறந்த விசாரணை கைதிக்கும் தொடர்பு இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

ஆற்றில் தொழிலாளி பிணம்

நெல்லை மேலப்பாளையம் கருங்குளம் பீடி காலனியை சேர்ந்தவர் முகமது உசேன் (வயது 45). இவர் கடைகளுக்கு சென்று சாம்பிராணி புகை போடும் தொழிலாளி.

நேற்று முன்தினம் மாலை கொக்கிரகுளம் தாமிரபரணி ஆற்றில் கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் முகமது உசேன் பிணமாக கிடந்தார். இதுகுறித்து தகவல் அறிந்த நெல்லை சந்திப்பு போலீஸ் இன்ஸ்பெக்டர் முத்துக்குமரன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று, முகமது உசேன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

பரபரப்பு தகவல்கள்

இதுதொடர்பாக நெல்லை சந்திப்பு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணையை முடுக்கி விட்டனர். முகமது உசேன் கூட்டாளியான மேலப்பாளையத்தை சேர்ந்த முருகன் என்பவரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர். 

அப்போது, பரபரப்பு தகவல்கள் வெளியானது. அதில் முகமது உசேன், முருகன் மற்றும் மேலப்பாளையம் ஆமீன்புரத்தை சேர்ந்த சுலைமான் (44) ஆகிய 3 பேரும் கஞ்சா வியாபாரம் செய்து வந்தனர். கஞ்சா பிடிக்கும்போது அவர்களுக்குள் அடிக்கடி மோதல் ஏற்பட்டது.

கழுத்தை அறுத்துக்கொலை

நேற்று முன்தினம் முகமது உசேன் உள்ளிட்ட 3 பேரும் கொக்கிரகுளம் தாமிரபரணி ஆற்றங்கரையில் கஞ்சா பிடித்துக்கொண்டு இருந்தனர்.
அப்போது அவர்களுக்குள் திடீரென்று மோதல் ஏற்பட்டது. இதில் முருகன், சுலைமான் ஆகியோர் சேர்ந்து முகமது உசேனை கத்தியால் கழுத்தை அறுத்துக் கொலை செய்தனர். பின்னர் அவரது உடலை ஆற்றில் வீசிச் சென்றனர். 

மேற்கண்ட தகவல் போலீசார் விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து முருகனை போலீசார் கைது செய்தனர்.

இறந்த விசாரணை கைதிக்கு தொடர்பு

இதற்கிடையே, சுலைமான் குறித்து போலீசார் விசாரணை நடத்திய போது, அவர் நேற்று முன்தினம் பாளையங்கோட்டை ஐகிரவுண்டு போலீஸ் நிலையத்தில் விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்டபோது இறந்தவர் என்ற திடுக்கிடும் தகவலும் வெளியானது. 

அதாவது சுலைமான் மோட்டார் சைக்கிள் ஒன்றை திருடிக் கொண்டு சென்றபோது பொதுமக்கள் பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்தனர். அவரை போலீஸ் நிலையத்தில் விசாரணைக்கு அழைத்து சென்றுபோது திடீரென்று மயங்கி விழுந்தார். பின்னர் சுலைமானை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தபோது இறந்துவிட்டது தெரியவந்தது. இந்த சம்பவம் தொடர்பாகவும் போலீசார் தனியாக விசாரணை நடத்தி வருகிறார்கள். 

நெல்லை தாமிரபரணி ஆற்றில் பிணமாக கிடந்த தொழிலாளி கழுத்தை அறுத்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

மேலும் செய்திகள்