புதுக்கோட்டை வட்டார போக்குவரத்து அலுவலர் வீட்டில் ரூ.5½ லட்சம் பறிமுதல்

தஞ்சையில், 21 மணி நேரம் லஞ்ச ஒழிப்பு போலீசார் நடத்திய சோதனையில் புதுக்கோட்டை வட்டார போக்குவரத்து அலுவலர் வீட்டில் ரூ.5 லட்சத்து 50 ஆயிரம் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் 100 பவுன் நகைகள், வைர நெக்லஸ் மற்றும் பல்வேறு ஆவணங்களும் கண்டுபிடிக்கப்பட்டன.

Update: 2022-02-05 19:51 GMT
தஞ்சாவூர்:-

தஞ்சையில், 21 மணி நேரம் லஞ்ச ஒழிப்பு போலீசார் நடத்திய சோதனையில் புதுக்கோட்டை வட்டார போக்குவரத்து அலுவலர் வீட்டில் ரூ.5 லட்சத்து 50 ஆயிரம் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் 100 பவுன் நகைகள், வைர நெக்லஸ் மற்றும் பல்வேறு ஆவணங்களும் கண்டுபிடிக்கப்பட்டன.

வட்டார போக்குவரத்து அலுவலர்

தஞ்சை மருத்துவக்கல்லூரி சாலை கிருஷ்ணா நகரில் வசித்து வருபவர் ஜெய்சங்கர். இவர் நாகை, கடலூர், கும்பகோணம் ஆகிய இடங்களில் வட்டார போக்குவரத்து அலுவலராக பணியாற்றி வந்தார். தற்போது புதுக்கோட்டை வட்டார போக்குவரத்து அலுவலராக பணியாற்றி வருகிறார்.
இவர் வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக லஞ்ச ஒழிப்பு போலீசாருக்கு புகார் வந்தது.

அதிரடி சோதனை

அதன்பேரில் தஞ்சை லஞ்ச ஒழிப்பு துணை போலீஸ் சூப்பிரண்டு ராஜூ தலைமையில் போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் சரவணன், பத்மாவதி மற்றும் போலீசார் என 10 பேர் கொண்ட குழுவினர் நேற்று காலை 7 மணிக்கு ஜெய்சங்கர் வீட்டிற்கு சென்றனர்.
பின்னர் வீட்டின் நுழைவு வாயில் கேட்டை பூட்டி விட்டு சோதனையை தொடங்கினர். வீட்டின் ஒவ்வொரு அறையிலும் அங்குலம், அங்குலமாக சோதனையிட்டனர்.

21 மணி நேரம் நடந்தது

இது தொடர்பாக ஜெய்சங்கர் மற்றும் அவரது குடும்பத்தினரிடமும் போலீசார் விசாரணை நடத்தினர். அதேபோல், தஞ்சை மருத்துவக் கல்லூரி சாலையில் ஜெய்சங்கருக்கு சொந்தமான பெட்ரோல் விற்பனை நிலையத்திலும் லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடி சோதனை நடத்தினர்.
வீடு மற்றும் பெட்ரோல் விற்பனை நிலையம் ஆகியவற்றில் நடந்த இந்த சோதனை நேற்று முன்தினம் காலை 7 மணிக்கு தொடங்கி நேற்று அதிகாலை 4 மணிக்கு நிறைவடைந்தது. மொத்தம் 21 மணி நேரம் இந்த சோதனை நடந்தது. 

100 பவுன் நகைகள்-வைர நெக்லஸ்

லஞ்ச ஒழிப்பு போலீசார் நடத்திய இந்த சோதனையில் ரூ.5 லட்சத்து 50 ஆயிரம், 100 பவுன் நகைகள், வைர நெக்லஸ், வைரத்தோடு, 2 வங்கிகளின் லாக்கர் சாவிகள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
மேலும் தஞ்சை கிருஷ்ணா நகரில் உள்ள சுமார் ரூ.3 கோடி மதிப்பிலான பங்களா, தஞ்சை செங்கிப்பட்டியில் உள்ள பண்ணை வீடு, தஞ்சையில் பெட்ரோல் விற்பனை நிலையம் மற்றும் 5 கார்கள், ஜெய்சங்கர் மனைவி பெயரில் 10-க்கும் மேற்பட்ட வங்கி கணக்குகள், ஜெய்சங்கர் பெயரில் 3 வங்கி கணக்குகள், 2 வங்கி லாக்கர் சாவிகளும் கண்டுபிடிக்கப்பட்டது.

ரூ.5½ லட்சம் பறிமுதல்

இந்த சோதனையின் முடிவில் கணக்கில் வராத ரூ.5 லட்சத்து 50 ஆயிரத்தை லஞ்ச ஒழிப்பு போலீசார் பறிமுதல் செய்தனர்.
பறிமுதல் செய்யப்பட்ட பணம் மற்றும் அசையும், அசையா சொத்து மதிப்புகள் குறித்த அறிக்கை, வங்கி லாக்கர் சாவிகள் ஆகியவற்றை கும்பகோணத்தில் உள்ள கூடுதல் மாவட்ட குற்றவியல் நீதிமன்றத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் ஒப்படைக்க உள்ளனர்.

வழக்குப்பதிவு

மேலும் வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக ஜெய்சங்கர் மீது லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
இதுகுறித்து லஞ்ச ஒழிப்பு போலீசார் கூறும்போது, பத்திரப்பதிவு துறை, வருமான வரித்துறை ஆகியவற்றில் ஜெய்சங்கர் சொத்துக்கள் மற்றும் வருமானம் குறித்து ஆவணங்களை சரி பார்க்க உள்ளோம். வாகனப் பதிவு குறித்தும் விசாரிக்க இருக்கிறோம். 
இவர் எங்கு பணிபுரிந்தபோது அதிகமாக சொத்து சேர்த்தார் என்று விசாரணை நடத்த உள்ளோம். இவரது வருமானம் மற்றும் செலவு குறித்தும், இவரது குடும்பத்தினருக்கு வேறு ஏதாவது வகையில் வருமானம் இருக்கிறதா என்பது குறித்தும் விசாரிக்க உள்ளோம். தற்போது ஜெய்சங்கர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளோம். விசாரணையின் முடிவில்தான் அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றனர்.

மேலும் செய்திகள்