நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் 1,095 மனுக்கள் ஏற்பு; 19 மனுக்கள் தள்ளுபடி
புதுக்கோட்டை மாவட்டத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் மொத்தம் 1,095 வேட்பு மனுக்கள் ஏற்கப்பட்டன. 19 மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன.
புதுக்கோட்டை,
வேட்பு மனு
புதுக்கோட்டை மாவட்டத்தில் புதுக்கோட்டை, அறந்தாங்கி ஆகிய நகராட்சிகளிலும், அன்னவாசல், அரிமளம், ஆலங்குடி, கீரனூர், கீரமங்கலம், கறம்பக்குடி, இலுப்பூர், பொன்னமராவதி ஆகிய பேரூராட்சிகளிலும் வார்டு கவுன்சிலர் பதவிக்கு நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வருகிற 19-ந் தேதி நடைபெறுகிறது. தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் கடந்த 28-ந் தேதி தொடங்கியது.
நகராட்சி, பேரூராட்சி அலுவலகங்களில் வேட்பு மனு தாக்கல் நடைபெற்று வந்தது. இந்த நிலையில் நேற்று முன்தினத்துடன் வேட்பு மனு தாக்கல் நிறைவடைந்தது. வேட்பு மனுக்கள் பரிசீலனை அந்தந்த நகராட்சி, பேரூராட்சி அலுவலகங்களில் நடைபெற்றது.
19 மனுக்கள் தள்ளுபடி
மாவட்டத்தில் மொத்தம் 189 கவுன்சிலர்கள் பதவிக்கு தி.மு.க., அ.தி.மு.க., காங்கிரஸ், பா.ஜனதா உள்ளிட்ட அரசியல் கட்சியினர், சுயேட்சைகள் வேட்பு மனு தாக்கல் செய்திருந்தனர். இதில் அரசியல் கட்சி சார்பில் போட்டியிட வாய்ப்பு கிடைக்காதவர்கள் கட்சி சார்பில் இல்லாமல் சுயேட்சையாகவும் மனு தாக்கல் செய்தனர். மாவட்டத்தில் மொத்தம் 1,113 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டிருந்தன.
இந்த நிலையில் மனுக்கள் பரிசீலனை நேற்று நடைபெற்றது. இதில் 2 நகராட்சி, 8 பேரூராட்சிகளில் என 1,095 மனுக்கள் ஏற்கப்பட்டன. மொத்தம் 19 மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன.
அன்னவாசல், இலுப்பூர்
அன்னவாசல் பேரூராட்சியில் 76 பேரும், இலுப்பூர் பேரூராட்சியில் 97 பேர் மனு தாக்கல் செய்த இருந்தனர். இதில் அன்னவாசல் பேரூராட்சி 3-வது வார்டில் தே.மு.தி.க. வேட்பாளர் 2 மனுக்களை தாக்கல் செய்திருந்தார். அதில் ஒருமனு நிராகரிக்கப்பட்டது. இதேபோன்று 11-வது வார்டில் சுயேட்சை வேட்பாளர் பெண் ஒருவர் மனுதாக்கல் செய்த படிவத்தில் கையொப்பம் இடாததால் அவரது மனு நிராகரிக்கப்பட்டது. இதனால் அன்னவாசல் பேரூராட்சியில் 74 பேர் களத்தில் உள்ளனர்.
இலுப்பூர் பேரூராட்சியில் 2-வது வார்டில் ஒரே வேட்பாளர் 2 மனு தாக்கல் செய்ததால் ஒரு மனு நிராகரிக்கப்பட்டது. 5-வது வார்டில் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் மனு நிராகரிக்கப்பட்டது. 8-வது வார்டில் சுயேட்சை வேட்பாளரின் மனு நிராகரிக்கப்பட்டது. இதனால் இலுப்பூர் பேரூராட்சியில் 94 பேர் போட்டியிடுகிறார்கள்.
கீரனூர்
கீரனூர் பேரூராட்சியில் 73 பேர் மனுத்தாக்கல் செய்திருந்தனர். மனு பரிசீலனையில் 4-வது வார்டில் அ.தி.மு.க. மாற்று வேட்பாளர் மணிகண்டன் கையெழுத்து விடுபட்டிருந்ததாலும் கணேஷ் ராம் என்ற சுயேட்சை வேட்பாளர் 2 முறை மனு தாக்கல் செய்திருந்ததால் ஒரு மனுவை தள்ளுபடி செய்தும், 12-வது வார்டில் மனு தாக்கல் செய்திருந்த அ.தி.மு.க. மாற்று வேட்பாளர் தீபிகா என்பவருக்கு வயது குறைவாக இருந்ததால் தள்ளுபடி செய்யப்பட்டன. மேலும், 14-வது வார்டில் இளஞ்சியம் என்ற சுயேட்சை வேட்பாளர் டெபாசிட் பணம் செலுத்தாததால் அவரது மனு தள்ளுபடி செய்யப்பட்டது. கீரனூர் பேரூராட்சியில் 69 பேர் மனுக்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டன.
கீரமங்கலம், அரிமளம்
கீரமங்கலம் பேரூராட்சியில் உள்ள 15 வார்டுகளில் போட்டியிட அரசியல் கட்சி வேட்பாளர்கள், சுயேட்சை வேட்பாளர்கள் என 68 பேர் வேட்பு மனு தாக்கல் செய்திருந்தனர். வேட்பு மனுக்கள் பரிசீலனையில் அனைத்து மனுக்களும் ஏற்கப்பட்டன.
அரிமளம் பேரூராட்சியில் 78 பேர் வேட்பு மனு தாக்கல் செய்திருந்தனர். இதில், அனைத்து மனுக்களும் ஏற்றுக்கொள்ளப்பட்டது.
கறம்பக்குடி, ஆலங்குடி
கறம்பக்குடி பேரூராட்சியில் உள்ள 15 வார்டுகளில் போட்டியிட அரசியல் கட்சி வேட்பாளர்கள், சுயேட்சை வேட்பாளர்கள் என 82 பேர் வேட்பு மனு தாக்கல் செய்திருந்தனர். வேட்பு மனுக்கள் பரிசீலனையில் அனைத்து மனுக்களும் ஏற்கப்பட்டன.
ஆலங்குடி பேரூராட்சியில் உள்ள 15 வார்டுகளில் போட்டியிட அரசியல் கட்சி வேட்பாளர்கள், சுயேட்சை வேட்பாளர்கள் என 75 பேர் வேட்பு மனு தாக்கல் செய்திருந்தனர். இதில் ஒரு மனு தள்ளுபடி செய்யப்பட்டது.
பொன்னமராவதி
பொன்னமராவதி பேரூராட்சியில் உள்ள 15 வார்டுகளுக்கான தேர்தலில் போட்டியிட 83 பேர் வேட்பு மனு தாக்கல் செய்திருந்தனர். இதில் 7-வது வார்டில் போட்டியிட்ட தனபாலன் என்பவர் 2 முறை மனு தாக்கல் செய்து இருந்தார். அதில் ஒரு மனுவில் குளறுபடிகள் இருந்ததால் அதை தேர்தல் நடத்தும் அலுவலர் நிராகரித்தார். மற்றொரு மனு ஏற்கப்பட்டது. பொன்னமராவதி பேரூராட்சியில் 82 மனுக்கள் ஏற்கப்பட்டன.
தீவிர பிரசாரம்
வேட்பு மனுவை வாபஸ் பெற நாளை (திங்கட்கிழமை) கடைசி நாளாகும். வேட்பாளர் இறுதிபட்டியல் நாளை வெளியிடப்படும். வேட்பு மனு தாக்கல் நிறைவடைந்த நிலையில் வாக்குப்பதிவிற்கான முன்னேற்பாடுகளை தேர்தல் அதிகாரிகள் மேற்கொண்டுள்ளனர். வேட்பாளர்கள் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.