புதுக்கோட்டை அருகே லாரி உரிமையாளர் அடித்துக்கொலை
புதுக்கோட்டை அருகே லாரி உரிமையாளர் அடித்துக்கொலை செய்யப்பட்டார்.
புதுக்கோட்டை,
லாரி உரிமையாளர்
புதுக்கோட்டை அருகே மாங்கனாம்பட்டியை சேர்ந்தவர் ரெங்கராஜன் (வயது 45). இவர் டிப்பர் லாரியை சொந்தமாக வைத்து ஓட்டி வந்தார். இந்த நிலையில் ரெங்கராஜன் நேற்று மாலை காரில் மாங்கானாம்பாட்டி அருகே சென்றுகொண்டிருந்தார். அப்போது சாலையின் குறுக்கே கம்புகள், கட்டைகள் வைத்து ஒரு தரப்பினர் தடுப்பு ஏற்படுத்தி வைத்திருந்தனர்.
அந்த பகுதியில் இடப்பிரச்சினை தொடர்பாக இரு தரப்பினருக்கு இடையே தகராறு ஏற்பட்டு இருந்துள்ளது. அந்த நேரத்தில் ரெங்கராஜன் சென்ற நிலையில், காரை விட்டு இறங்கி தடுப்புகளை அகற்றி செல்ல முயன்றிருக்கிறார். அப்போது அங்கிருந்தவர்களில் சிலர் கட்டையால் ரெங்கராஜனை தாக்கியதாக கூறப்படுகிறது.
போலீசார் விசாரணை
இதில் பலத்த காயமடைந்த அவரை அப்பகுதி மக்கள் மீட்டு சிகிச்சைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் செல்லும் வழியிலேயே அவர் பரிதாபமாக இறந்தார். இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த கணேஷ் நகர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.
பின்னர் ரெங்கராஜனின் உடல் பிரேத பரிசோதனைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது. ரெங்கராஜனை அடித்துக் கொன்ற நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். மேலும், இந்த கொலை சம்பவம் தொடர்பாக ஒருவரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
புதுக்கோட்டை அருகே லாரி உரிமையாளர் அடித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.