காட்டு பன்றிகள் அட்டகாசம்; 600 வாழைகள் நாசம்
களக்காடு அருகே காட்டுப்பன்றிகள் அட்டகாசத்தில் ஈடுபட்டன.
களக்காடு:
களக்காடு மேற்கு தொடர்ச்சி மலையில் உள்ள தலையணை மலையடிவாரத்தில் கள்ளியாறு, சிவப்புரம் விவசாய பகுதிகள் உள்ளன. இந்நிலையில் அப்பகுதியில் காட்டு பன்றிகளின் அட்டகாசம் அதிகரித்து வருகிறது. களக்காடு நாடார் புதுத்தெருவை சேர்ந்த சுரேஷ், சீயோன்நகரை சேர்ந்த நாராயணன், சிவபுரத்தை சேர்ந்த தங்கப்பாண்டியன் ஆகியோருக்கு சொந்தமான தோட்டத்தில் காட்டு பன்றிகள் புகுந்து வாழைகளை நாசம் செய்து உள்ளன.
கடந்த 2 நாட்களில் மட்டும் 600-க்கும் மேற்பட்ட வாழைகள் நாசமாகி உள்ளன. அவை 6 மாதமான ஏத்தன் ரகத்தை சேர்ந்தவை ஆகும். சேதமடைந்த வாழைகளுக்கு இழப்பீடு வழங்கவும், காட்டு பன்றிகள் அட்டகாசத்தை தடுக்கவும் வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விவசாயிகள் வலியுறுத்தி உள்ளனர்.