மரக்கிளைகளை அகற்ற வேண்டும்
நாகர்கோவில், ஒழுகினசேரி பாலத்தின் அருகில் நிற்கும் மரங்களின் கிளைகள் நாளுக்கு நாள் படர்ந்து வளர்கின்றன. இதனால் கனரக வாகனங்கள் செல்லும் போது மரக்கிளைகள் தட்டி விபத்துகள் ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மரக்கிளைகளை அகற்ற உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-தமிழரசு, ஆரல்வாய்மொழி.
ரெயில்வே மேம்பாலம் வேண்டும்
மார்த்தாண்டம் அருகே விரிகோட்டில் சாலையின் குறுக்கே ரெயில்வே கேட் உள்ளது. இந்த பகுதியில் அடிக்கடி ரெயில்கள் செல்வதால் கேட் மூடப்படுகிறது. இதனால், சாலை போக்குவரத்து பாதிக்கப்படுவதால் பொதுமக்கள் அவதியடைந்து வருகிறார்கள். எனவே, இந்த பகுதியில் ரெயில்வே மேம்பாலம் விரைவில் கட்ட வேண்டும். மேலும், தற்போது மாற்றுப்பாதையில் மேம்பாலம் கட்ட நடவடிக்கை எடுக்கப்படுவதாக தெரிகிறது. பொதுமக்கள் நலன் கருதி தற்போது ரெயில்வே கேட் உள்ள இடம் வழியாகதான் மேம்பாலம் கட்ட வேண்டும் என்பது இந்த பகுதி மக்களின் கோரிக்கையாக உள்ளது.
-சுஜின், விரிகோடு.
நடைபாதையை சீரமைக்க வேண்டும்
நாகர்கோவில் வாத்தியார்விளை காலசாமிகோவில் தெருவில் ஏராளமான வீடுகள் உள்ளன. இந்த வீடுகளுக்கு செல்லும் பாதையில் கழிவுநீர் ஓடை அமைக்கப்பட்டு அதன்மேல் சிெமண்ட் சிலாப் போட்டு மூடப்பட்டுள்ளது. தற்போது அந்த சிமெண்ட் சிலாப்புகள் கழன்று கிடக்கின்றன. அந்த வழியாகதான் பள்ளி மாணவர்கள், முதியவர்கள் என அனைத்து தரப்பு மக்களும் நடந்து செல்கிறார்கள். நடை பாதை சரியாக இல்லாததால் பலரும் தவறி விழ வாய்ப்பு உள்ளது. எனவே, பாதையை சீரமைக்க சம்பந்தபட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-பவானிசெல்வம், வாத்தியார்விளை.
சாலையில் வீணாகும் குடிநீர்
தென்தாமரைக்குளம் பேரூராட்சிக்கு உட்பட்ட மணகுடி- கன்னியாகுமரி சாலையில் குடிநீர் குழாய் பதிக்கப்பட்டுள்ளது. இந்த குழாயில் உடைப்பு ஏற்பட்டு குடிநீர் வீணாக சாலையில் பாய்கிறது. இந்த தண்ணீர் சாக்கடையாக மாறி சுகாதார சீர்கேட்டை ஏற்படுத்தி வருகிறது. எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பார்வையிட்டு குடிநீர் வீணாவதை தடுத்து சுகாதாரத்தை பேண நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-த.செ.பிரஜாபதி,
கோவில்விளை.
பஸ் வசதி வேண்டும்
பறக்கை ஊராட்சி கக்கன்புதூர் வழியாக நாகர்கோவிலுக்கு பஸ் இயக்கப்பட்டு வந்தது. தற்போது இந்த பஸ் கடந்த பல மாதங்களாக ரத்து செய்யப்பட்டுள்ளது. இதனால், இந்த பஸ்சை நம்பி இருந்த பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகள், அரசு மற்றும் தனியார் நிறுவன ஊழியர்கள் மிகவும் சிரமம் அடைகிறார்கள். இவர்கள் சுமார் 2 கிலோ மீட்டர் தூரம் நடந்து சென்று பஸ் ஏற வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். எனவே, நிறுத்தப்பட்ட பஸ்சை மீண்டும் இயக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-நரேஷ், பறக்கை.
நடவடிக்கை எடுக்க வேண்டும்
தக்கலை பெருமாள்புரத்தில் பெருமாள் கோவிலில் இருந்து நகராட்சியின் பின்பக்கம் வழியாக அரசுவிளை செல்லும் தெரு சாலையில் குடிநீர் குழாய்கள் பதிக்கப்பட்டது. இதற்காக சாலையில் பதிக்கப்பட்டிருந்த அலங்கார தரைகற்களை அகற்றி விட்டு சாலையை தோண்டினார். பின்னர், பணி முடிந்த பின்பு கழற்றப்பட்ட அலங்கார தரைக்கற்களை மீண்டும் முறையாக பதிக்காமல் குப்பை போல் போட்டுவிட்டு சென்றுள்ளனர். இதனால், அந்த வழியாக நடந்து செல்கிறவர்களும், வாகனங்களில் செல்கிறவர்களும் மிகவும் அவதிப்படுகிறார்கள். எனவே, தெரு சாலையை முறையாக சீரமைக்க சம்பந்தபட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-முருகன், பெருமாள்புரம்.
கூடுதல் மின்கம்பம் நடப்பட்டது
கொட்டில்பாடு கிராமத்தில் தேவாலயத்திற்கு முன்பு உள்ள மின்கம்பிகள் தாழ்வாக தொங்கி கொண்டிருந்தது. இதனால் விபத்து ஏற்படும் அபாயம் இருந்தது. எனவே, இரு மின்கம்பங்களுக்கு இடையே உள்ள இடைவெளியில் மேலும் ஒரு மின்கம்பம் நட வேண்டும் என ‘தினத்தந்தி’ புகார் பெட்டியில் 3-2-2022 அன்று செய்தி வெளியிடப்பட்டது. உடனே, அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து கூடுதலாக ஒரு மின்கம்பம் நடப்பட்டது. செய்தி வெளியிட்ட தினத்தந்திக்கும், நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கும் பொதுமக்கள் நன்றி தெரிவித்துள்ளனர்.