பான்கார்டு, ஆதார் அட்டை இணைப்பதாக கூறி முதியவரிடம் ரூ.1¼ லட்சம் அபேஸ்
காரைக்குடியை சேர்ந்த முதியவரிடம் பான்கார்டு, ஆதார் அட்டை இணைப்பதாக கூறி ஆன்லைன் மூலம் அவரது வங்கி கணக்கில் இருந்து ரூ.1¼ லட்சத்தை மோசடி கும்பல் அபேஸ் செய்தது. இது குறித்த புகாரின் பேரில் போலீசார் அந்த கும்பலை தேடி வருகின்றனர்.
சிவகங்கை,
காரைக்குடியை சேர்ந்த முதியவரிடம் பான்கார்டு, ஆதார் அட்டை இணைப்பதாக கூறி ஆன்லைன் மூலம் அவரது வங்கி கணக்கில் இருந்து ரூ.1¼ லட்சத்தை மோசடி கும்பல் அபேஸ் செய்தது. இது குறித்த புகாரின் பேரில் போலீசார் அந்த கும்பலை தேடி வருகின்றனர்.
ரூ.1¼ லட்சம் மோசடி
சிவகங்கை மாவட்டம் காரைக்குடி கல்லுக்கட்டியை சேர்ந்தவர் சாத்தப்பன் (வயது 67). இவருடைய செல்போனுக்கு ஒரு நம்பரில் இருந்து குறுந்தகவல் ஒன்று வந்தது. அதில் அவருடைய வங்கிக்கணக்கில் பான் கார்டு இணைக்கப்படவில்லை என்றும் எனவே உடனடியாக இந்த செய்தியில் உள்ள லிங்கில் சென்று பான்கார்டு இணைக்கும் படி தெரிவிக்கப்பட்டிருந்தது.
இதை தொடர்ந்து அவர் அந்த லிங்கில் சென்று அவருடைய பான் கார்டு மற்றும் வாடிக்கையாளர் தொடர்பான விவரங்களை இணைத்தாராம். அதன் பின்னர் சற்று நேரத்தில் அவருடைய வங்கிக் கணக்கில் இருந்து ரூ.1 லட்சத்து 38 ஆயிரத்தை எடுத்து விட்டார்களாம்.
போலீசில் புகார்
இதுகுறித்து சாத்தப்பன் சிவகங்கை மாவட்ட சைபர் கிரைம் போலீசில் புகார் செய்தார். இதுதொடர்பாக சைபர் கிரைம் இன்ஸ்பெக்டர் ராமகிருஷ்ணன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
இதேபோல கடந்த சில நாட்களுக்கு முன்பு காரைக்குடி பகுதியில் 2 பேரிடம் இருந்து இதேபோல் தலா ரூ.1 லட்சத்தை ஏமாற்றி எடுத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
வங்கி விவரங்களை தெரிவிக்காதீர்கள்
இது குறித்து போலீஸ் அதிகாரி ஒருவர் கூறும் போது, ஒரு சில கும்பல்கள் செல்போனில் பேசும் போது நமக்கு உதவுவது போல பேசுவார்கள். அவர்களிடம் மிகவும் எச்சரிக்கையாக இருங்கள். எக்காரணம் கொண்டும் உங்களது வங்கி கணக்கு விவரம், ஏ.டி.எம். ரகசிய குறியீ்ட்டு எண், ஆதார், பான்கார்டு உள்ளிட்ட விவரங்களை தெரிவிக்காதீர்கள். அதோடு முன்பின் தெரியாத இணையதள முகவரிக்கு சென்று இது போல மோசடி பேர்வழிகளிடம் சிக்கி பணத்தை இழந்து விடாதீர்கள். அப்படி ஏமாந்தாலும் உடனே சைபர்கிரைம் போலீசில் புகார் செய்து மோசடி பேர்வழிகளை பிடிப்பதற்கு உதவுங்கள். எனினும் இணையதள மோசடி ஆசாமிகளிடம் இருந்து எச்சரிக்கையாக இருங்கள் என்றார்.