ராமேசுவரம் நகராட்சியில் 140 வேட்பு மனுக்கள் ஏற்பு; ஒரு மனு தள்ளுபடி
ராமேசுவரம் நகராட்சியில் 140 வேட்பு மனுக்கள் ஏற்கப்பட்டன. ஒரு மனு தள்ளுபடி செய்யப்பட்டது. தொண்டி பேரூராட்சியில் 5 பேரின் மனு நிராகரிக்கப்பட்டது.
ராமேசுவரம்,
ராமேசுவரம் நகராட்சியில் 140 வேட்பு மனுக்கள் ஏற்கப்பட்டன. ஒரு மனு தள்ளுபடி செய்யப்பட்டது. தொண்டி பேரூராட்சியில் 5 பேரின் மனு நிராகரிக்கப்பட்டது.
ராமேசுவரம்
ராமேசுவரம் நகராட்சியில் உள்ள 21 வார்டுகளில் போட்டியிடுவதற்காக 141 வேட்பாளர்கள் மனு தாக்கல் செய்தனர். இதற்கான வேட்பு மனு பரிசீலனை நேற்று தேர்தல் அதிகாரி மூர்த்தி தலைமையில் நடந்தது. இதில் 10-வது வார்டில் வேட்பு மனு தாக்கல் செய்திருந்த நம்புராஜன் என்பவர் 2 வேட்பு மனு தாக்கல் செய்திருந்ததால் அவரது ஒரு மனு தள்ளுபடி செய்யப்பட்டது. மற்றொரு மனு ஏற்றுக்கொள்ளப்பட்டது. இதையடுத்து ராமேசுவரத்தில் 140 வேட்பு மனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டன என தேர்தல் அதிகாரி அறிவித்தார்.
கமுதி பேரூராட்சியை பொறுத்தவரை 15 வார்டுகளில் 46 பேர் வேட்பு மனு தாக்கல் செய்தனர். வேட்பு மனு பரிசீலனையின் போது 46 மனுக்களுக்கும் ஏற்றுக்கொள்ளப்பட்டன. அபிராமம் பேரூராட்சியை பொறுத்தவரை 15 வார்டுகளில் 43 பேர் வேட்பு மனு தாக்கல் செய்திருந்தனர். வேட்பு மனு பரிசீலனையின் போது 43 மனுக்களும் ஏற்றுக்கொள்ளப்பட்டன.
தொண்டி பேரூராட்சி
தொண்டி பேரூராட்சியில் 15 வார்டுகள் உள்ளன. இதில் 111 பேர் வேட்பு மனு தாக்கல் செய்திருந்தனர். இதில் நேற்று நடைபெற்ற வேட்புமனு பரிசீலனையின் போது பெண்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட வார்டில் ஆண் வேட்புமனு தாக்கல் செய்திருந்து மற்றும் வாக்காளர் பட்டியலில் பெயர் இடம் பெறாத காரணத்தினால் 7 மற்றும் 10 ஆகிய வார்டுகளில் அ.தி.மு.க. சார்பில் தாக்கல் செய்யப்பட்டிருந்த 2 வேட்பு மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டது. இதேபோல் அ.ம.மு.க. சார்பில் வார்டு எண் 10-ல் தாக்கல் செய்யப்பட்ட வேட்பு மனு வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லாததால் தள்ளுபடி செய்யப்பட்டது. அதேபோல் வார்டு எண் 1 மற்றும் 5 ஆகியவற்றில் உரிய இணைப்பு படிவம் மற்றும் 21 வயது பூர்த்தியடையாத சுயேச்சை வேட்பாளர்கள் 2 பேரின் விண்ணப்பங்களை தேர்தல் நடத்தும் அலுவலர் செல்வராஜ், உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்கள் லியோ ஜெரால்டு எமர்சன் ஜீவானந்தம் ஆகியோர் தள்ளுபடி செய்தனர். மண்டபம் பேரூராட்சியில் உள்ள 18 வார்டுகளுக்கு 79 பேர் வேட்பு மனு தாக்கல் செய்திருந்தனர். இதில் வேட்பு மனு பரிசீலனையின் போது 79 வேட்பு மனுக்களும் ஏற்றுக்கொள்ளப்பட்டன.
ஆர்.எஸ்.மங்கலத்தில் உள்ள 15 வார்டுகளுக்கு 85 பேர் மனு தாக்கல் செய்தனர். வேட்பு மனு பரிசீலனையின் போது அனைத்து மனுக்களும் ஏற்றுக்கொள்ளப்பட்டன.