தி.மு.க., அ.தி.மு.க., அ.ம.மு.க., காங்கிரஸ், பா.ஜ.க. வேட்பாளர்கள் 8 பேர் மனு நிராகரிப்பு
நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் தஞ்சாவூர் மாநகராட்சியில் தி.மு.க., அ.தி.மு.க., பா.ஜ.க., காங்கிரஸ், அ.ம.மு.க. ஆகிய கட்சிகளை சேர்ந்த 8 பேரின் மனுக்கள் நிராகரிக்கப்பட்டன.
தஞ்சாவூர்:-
நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் தஞ்சாவூர் மாநகராட்சியில் தி.மு.க., அ.தி.மு.க., பா.ஜ.க., காங்கிரஸ், அ.ம.மு.க. ஆகிய கட்சிகளை சேர்ந்த 8 பேரின் மனுக்கள் நிராகரிக்கப்பட்டன.
உள்ளாட்சி தேர்தல்
தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வருகிற 19-ந் தேதி நடைபெற உள்ளது. இதற்கான வேட்பு மனு தாக்கல் கடந்த மாதம் 28-ந் தேதி தொடங்கியது.
மொத்தம் 51 வார்டுகள் கொண்ட தஞ்சை மாநகராட்சியில் முதல் நாளில் யாரும் வேட்பு மனு தாக்கல் செய்யவில்லை. 29-ந் தேதி 2 பேரும், 31-ந் தேதி 3 பேரும், கடந்த 1-ந் தேதி 10 பேரும், 2-ந் தேதி 54 பேரும், 3-ந் தேதி 167 பேரும், 4-ந் தேதி 155 பேரும் என மொத்தம் 391 பேர் வேட்பு மனு தாக்கல் செய்தனர்.
வேட்புமனு பரிசீலனை
இதைத்தொடர்ந்து, மாநகராட்சி அலுவலகத்தில் வேட்பு மனுக்கள் மீதான பரிசீலனை நேற்று நடைபெற்றது. இதில், 27-வது வார்டில் அ.தி.மு.க. வேட்பாளர் தங்கம்மாள், காங்கிரஸ் வேட்பாளர் ராணி பத்மநாபன் என இருவரது வேட்பு மனுக்களும் நிராகரிக்கப்பட்டன.
மேலும், 16-வது வார்டில் அ.தி.மு.க. பகுதிச் செயலாளர் புண்ணியமூர்த்தி, 19-வது வார்டில் பா.ஜ.க.வின் முரளிதரன், 20-வது வார்டில் தி.மு.க.வின் சாதிக் பாட்சா, 31-வது வார்டில் அ.தி.மு.க. பகுதி செயலாளர் எஸ்.ரமேஷ், 32-வது வார்டில் அ.ம.மு.க.வின் செந்தில் பல்லவராயர், 46-வது வார்டில் அ.தி.மு.க.வின் சிவக்குமார் ஆகியோருடைய மனுக்களும் நிராகரிக்கப்பட்டன. இதையடுத்து, 383 பேரின் மனுக்கள் ஏற்கப்பட்டன.