இலங்கை சிறையில் இருந்து விடுதலையான-43 மீனவர்களை விரைந்து அழைத்து வரக்கோரி ராமேசுவரத்தில் உறவினர்கள் போராட்டம்

இலங்கை சிறையில் இருந்து விடுதலையான 43 மீனவர்களை விரைந்து அழைத்து வரக்கோரி ராமேசுவரம் தாலுகா அலுவலகம் முன்பு உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.;

Update: 2022-02-05 18:16 GMT
ராமேசுவரம், 

இலங்கை சிறையில் இருந்து விடுதலையான 43 மீனவர்களை விரைந்து அழைத்து வரக்கோரி ராமேசுவரம் தாலுகா அலுவலகம் முன்பு உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். 

மீனவர்கள் கைது

ராமேசுவரத்தில் இருந்து கடந்த டிசம்பர் மாதம் 18-ந் தேதி 6 விசைப்படகுகளில் 43 மீனவர்கள் மீன்பிடிக்க சென்றனர். அவர்களை எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி இலங்கை கடற்படையினர் கைது செய்து யாழ்ப்பாணம் சிறையில் அடைத்தனர். படகுகளும் பறிமுதல் செய்யப்பட்டன. இலங்கை சிறையில் அடைக்கப்பட்டிருந்த ராமேசுவரத்தை சேர்ந்த 43 மீனவர்களும் கடந்த 25-ந் தேதி கோர்ட்டு உத்தரவின் பேரில் விடுவிக்கப்பட்டனர்.
தொடர்ந்து இந்த மீனவர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. பரிசோதனையின் முடிவில் 43 மீனவர்களும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு இருப்பது தெரியவந்தது. அதன்பின்னர் 43 மீனவர்களும் கிளிநொச்சியில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக கூறப்படுகிறது. 

போராட்டம் 

இந்த நிலையில் 43 மீனவர்களின் உடல்நிலை குறித்து வேறு எந்த தகவலும் அதிகாரிகள் யாரும் தெரிவிக்கவில்லை எனவும், செல்போனில் பேசுவதற்கும் ஏற்பாடு செய்யவில்லை என்பதால் மீனவர்களை பற்றி தெரியாமல் தவித்து வருவதாக மீனவர்களின் உறவினர்கள் தெரிவித்தனர். 
மேலும் 43 பேரின் உடல்நிலை குறித்து தெரிய வேண்டும் எனவும் அவர்களுடன் செல்போனில் பேச நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி நேற்று மீனவர்களின் உறவினர்கள் ராமேசுவரம் தாலுகா அலுவலகம் முன்பு காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். 
அவர்களிடம் தாசில்தார் அப்துல் ஜபார் மற்றும் மீன்வளத்துறை அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, சிறையிலிருந்து விடுவிக்கப்பட்ட மீனவர்களுக்கு 2-வது கட்டமாக மீண்டும் பரிசோதனை எடுக்கப்பட்டுள்ளதாகவும், அதன் முடிவு இரவு தெரியவரும், கொரோனா பாதிப்பு இல்லை என்றால் விரைவில் தமிழகம் வருவார்கள் எனவும், பரிசோதனை முடிவு வந்த பிறகு செல்போனில் பேச ஏற்பாடு செய்வதாகவும் கூறினர். இலங்கையில் இருந்து மீனவர்களை விரைந்து அழைத்துவர நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் மீண்டும் 7-ந் தேதி தாலுகா அலுவலகம் முன்பு அமர்ந்து முற்றுகை போராட்டத்தில் ஈடுபடுவோம் என கூறி விட்டு அவர்கள் கலைந்து சென்றனர்.

மேலும் செய்திகள்