அ.தி.மு.க. வேட்பாளர் மனு நீண்ட நேர பரிசீலனைக்கு பிறகு ஏற்பு
பட்டுக்கோட்டை நகராட்சி அ.தி.மு.க. வேட்பாளர் மனு நீண்டநேர பரிசீலனைக்கு பிறகு ஏற்கப்பட்டது.
பட்டுக்கோட்டை:-
பட்டுக்கோட்டை நகராட்சி அ.தி.மு.க. வேட்பாளர் மனு நீண்டநேர பரிசீலனைக்கு பிறகு ஏற்கப்பட்டது.
பட்டுக்கோட்டை நகராட்சி
பட்டுக்கோட்டை நகராட்சியில் 33 வார்டுகளுக்கு 189 பேர் வேட்பு மனு தாக்கல் செய்து இருந்தனர். இந்த வேட்பு மனுகள் மீதான பரிசீலனை நேற்று நடந்தது. இதில் பட்டுக்கோட்டை நகராட்சி 11-வது வார்டுக்கு அ.தி.மு.க. சார்பில் ப.சுரேஷ் வேட்புமனு தாக்கல் செய்திருந்தார். தேர்தல் நடத்தும் அலுவலரும் நகராட்சி ஆணையருமான சுப்பையா முன்னிலையில் வேட்புமனு பரிசீலனை செய்யப்பட்டது.
அப்போது தேர்தல் அதிகாரி, ‘நகராட்சி கடை வாடகைக்கு எடுத்து வாடகை நிலுவையில் இருந்தால் வேட்புமனு தள்ளுபடி செய்யப்படும்’ என்றார். அதற்கு வேட்பாளர் சுரேஷ், ‘கடை வாடகைப்பாக்கி இல்லாத நிலையில் என்னுடைய வேட்புமனுவை ஏற்றுக்கொள்ள வேண்டும்’ என்று வாதிட்டார்.
வேட்புமனு ஏற்பு
இதை அறிந்த அ.தி.மு.க. முன்னாள் எம்.எல்.ஏ.க்கள், கட்சி நிர்வாகிகள், தேர்தல் அதிகாரி முன்னிலையில் கூடி விவாதம் செய்தனர். அப்போது தேர்தல் நடத்தும் அதிகாரி குறுக்கிட்டு, ‘சுரேசுக்கு நகராட்சி கடை வாடகைப்பாக்கி இருந்தால் வேட்புமனு ஏற்றுக்கொள்ளப்படாது. எனவே மறு பரிசீலனை செய்கிறேன் என்றுதான் சொன்னேன்.
பரிசீலனையில் அவருக்கு நகராட்சிக்கு செலுத்த வேண்டிய வரி பாக்கி எதுவும் கிடையாது என்று தெரியவந்துள்ளது. எனவே அவருடைய வேட்புமனு ஏற்றுக்கொள்ளப்பட்டது’ என்றார். அ.தி.மு.க. வேட்பாளர் மனு நீண்ட நேர பரிசீலனைக்கு பிறகு ஏற்கபட்டதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.