பொதுமக்கள் 2-வது நாளாக உண்ணாவிரதம்

அதிராம்பட்டினம் 18-வது வார்டை தனி வார்டாக அறிவிக்கக்கோரி பொதுமக்கள் 2-வது நாளாக உண்ணாவிரதம் இருந்தனர். அப்போது வாயில் கருப்புத்துணி கட்டி இருந்தனர்.

Update: 2022-02-05 18:05 GMT
அதிராம்பட்டினம்:-

அதிராம்பட்டினம் 18-வது வார்டை தனி வார்டாக அறிவிக்கக்கோரி பொதுமக்கள் 2-வது நாளாக உண்ணாவிரதம் இருந்தனர். அப்போது வாயில் கருப்புத்துணி கட்டி இருந்தனர். 

நகராட்சியாக தரம் உயர்வு

தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினம் பேரூராட்சி இந்த ஆண்டு நகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டு தற்போது 27 வார்டுகளாக மறு வரையறை செய்யப்பட்டு உள்ளது. இதில் பட்டியல் இன மக்கள் அதிகம் வசிக்கும் முத்தம்மாள் தெரு உள்ளிட்ட பகுதிகள் தனி வார்டாக அறிவிக்கப்பட்டு இருந்தன. ஆனால் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் அறிவிப்பதற்கு சில நாட்களுக்கு முன்பு 18-வது வார்டு பொது வார்டாக மாற்றம் செய்து அறிவிக்கப்பட்டது. 
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் வீடுகளில் கருப்புக்கொடி கட்டி இருந்தனர். முன்னதாக அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் தேர்தலை புறக்கணிப்பு செய்வதாக அறிவித்தனர். 

உண்ணாவிரதம்

இந்த நிலையில் 18-வது வார்டை மீண்டும் தனி வார்டாக அறிவிக்கக்கோரி அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் நேற்று முன்தினம் உண்ணாவிரத போராட்டத்தை தொடங்கினர். நேற்று 2-வது நாளாக உண்ணாவிரத போராட்டம் நீடித்தது. இதில் கலந்து கொண்டவர்கள் வாயில் கருப்புத்துணியை கட்டி இருந்தனர். தாங்கள் வசிக்கக்கூடிய 18-வது வார்டு பகுதியை தனி வார்டு அறிவிக்கும் வரை உண்ணாவிரதத்தை  கைவிடப் போவதில்லை என பொதுமக்கள் தெரிவித்தனர். 

மேலும் செய்திகள்