தேசிய திறனாய்வு தேர்வு

கடலூர் மாவட்டத்தில் 18 மையங்களில் நடந்த தேசிய திறனாய்வு தேர்வை 3,945 மாணவ-மாணவிகள் எழுதினர்.;

Update: 2022-02-05 17:29 GMT
கடலூர், 

தமிழகத்தில் அரசு, நிதிஉதவி மற்றும் சுயநிதி பள்ளிகளில் 10-ம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு ஒவ்வொரு ஆண்டும் தேசிய திறனாய்வு தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. இந்த தேர்வில் தேர்ச்சி பெறும் மாணவ-மாணவிகளுக்கு மாதந்தோறும் ரூ.1,250 வீதம் 11 மற்றும் 12-ம் வகுப்பு வரையிலும், இளங்கலை மற்றும் முதுகலை படிப்பு வரை ரூ.2000 வீதம் கல்வி உதவித்தொகையாக வழங்கப்படும். அந்த வகையில் 2021-2022-ம் கல்வி ஆண்டுக்கான தேசிய திறனாய்வு தேர்வு பிப்ரவரி 5-ந் தேதி நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டது. இத்தேர்வு 2 தாள்களை கொண்டது ஆகும். இதற்காக கடலூர் மாவட்டத்தில் 10-ம் வகுப்பு படிக்கும் 4,089 மாணவ-மாணவிகள் விண்ணப்பித்தனர். இவர்களுக்காக கடலூர் நகராட்சி அரசு மேல்நிலைப்பள்ளி, புனித வளனார் மேல்நிலைப்பள்ளி உள்பட மாவட்டம் முழுவதும் 18 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டது. இதையடுத்து தேர்வு நாளான நேற்று காலை மாணவ-மாணவிகள் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட தேர்வு மையங்களுக்கு திரண்டு சென்றனர்.
அங்கு அவர்களுக்கு தெர்மல் ஸ்கேனர் மூலம் உடல்வெப்ப நிலை பரிசோதிக்கப்பட்டது. பின்னர் முக கவசம் அணிந்து வந்த மாணவ-மாணவிகள் மட்டும் தேர்வு எழுத அனுமதிக்கப்பட்டனர். தொடர்ந்து காலை 9 மணிக்கு முதல் தாள் தேர்வு (மனத்திறன் தேர்வு) தொடங்கியது. இதையடுத்து மாணவர்கள் ஆர்வமுடன் தேர்வு எழுதினர். இந்த தேர்வு 11 மணி வரை நடந்தது. பின்னர் 11.30 மணி வரை இடைவேளை விடப்பட்டு, இரண்டாம் தாள் தேர்வு தொடங்கி நடந்தது. இது மதியம் 1.30 மணி வரை நடந்தது. இந்த தேர்வை மாவட்டம் முழுவதும் 3,945 மாணவ-மாணவிகள் எழுதினர்.

மேலும் செய்திகள்