விழுப்புரம் மாவட்டத்தில் 10-ம் வகுப்பு மாணவ- மாணவிகளுக்கான தேசிய திறனறிவு தேர்வு
மேல்படிப்புக்காக மத்திய அரசின் கல்வி உதவித்தொகையை பெற விழுப்புரம் மாவட்டத்தில் 10-ம் வகுப்பு மாணவ- மாணவிகளுக்கான தேசிய திறனறிவு தேர்வை 3,896 பேர் எழுதினர்.
விழுப்புரம்,
அரசு பள்ளிகள், அரசு நிதி உதவி பெறும் பள்ளிகள், தனியார் பள்ளிகளில் 10-ம் வகுப்பு படிக்கும் மாணவ- மாணவிகளுக்கு அவர்களது மேல்படிப்புக்காக 11-ம் வகுப்பு முதல் முனைவர் பட்டம் பெறும் வரை மத்திய அரசின் சார்பில் மாதந்தோறும் கல்வி உதவித்தொகையாக ரூ.1,000 வழங்கப்படுகிறது.
இந்த கல்வி உதவித்தொகையை பெறுவதற்காக ஆண்டுதோறும் 10-ம் வகுப்பு மாணவ- மாணவிகளுக்கான தேசிய திறனறிவு தேர்வு 2 கட்டங்களாக நடைபெற்று வருகிறது. இத்தேர்வுகளில் தேர்ச்சி பெறும் மாணவ- மாணவிகளுக்கு 11-ம் வகுப்பில் இருந்து அவர்களது வங்கி கணக்கில் நேரடியாக மாதந்தோறும் கல்வி உதவித்தொகை செலுத்தப்படும்.
3,896 பேர் எழுதினர்
தற்போது நடப்பு கல்வியாண்டிற்கான முதல்கட்ட தேசிய திறனறிவு தேர்வு நேற்று தமிழகம் முழுவதும் நடைபெற்றது. அந்த வகையில் விழுப்புரம் கல்வி மாவட்டத்தில் 11 தேர்வு மையங்களிலும், திண்டிவனம் கல்வி மாவட்டத்தில் 5 மையங்களிலும், செஞ்சி கல்வி மாவட்டத்தில் 4 மையங்களிலும் என விழுப்புரம் வருவாய் மாவட்டத்தில் மொத்தம் 20 மையங்களில் இத்தேர்வு நடந்தது.காலை 9 மணி முதல் 11 மணி வரை மணத்திறன் தேர்வும், 11.30 மணி முதல் மதியம் 1.30 மணி வரை படிப்பறிவு தேர்வும் நடைபெற்றது. இதில் மணத்திறன் தேர்வில் பொதுஅறிவு சம்பந்தமான கேள்விகளும், படிப்பறிவு தேர்வில் கணிதம், அறிவியல், சமூக அறிவியல் ஆகிய பாடப்பிரிவு சம்பந்தமான கேள்விகளும் கேட்கப்பட்டன. இத்தேர்வு எழுத 3,990 மாணவ- மாணவிகள் விண்ணப்பித்திருந்த நிலையில் 3,896 பேர் வந்திருந்து ஆர்வமுடன் தேர்வு எழுதினர். 94 பேர் தேர்வு எழுத வரவில்லை.
அதிகாரிகள் பார்வையிட்டனர்
விழுப்புரம் பீமநாயக்கன்தோப்பில் உள்ள நகராட்சி மேல்நிலைப்பள்ளி, விழுப்புரம் தூய இருதய மேல்நிலைப்பள்ளி, செஞ்சி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, அல்ஹிலால் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி ஆகிய தேர்வு மையங்களில் நடந்த தேசிய திறனறிவு தேர்வை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கிருஷ்ணப்பிரியா பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
இதேபோல் அந்தந்த கல்வி மாவட்டங்களில் நடந்த தேர்வை மாவட்ட கல்வி அலுவலர்கள் விழுப்புரம் சுந்தரமூர்த்தி, திண்டிவனம் கிருஷ்ணன், செஞ்சி (பொறுப்பு) காளிதாஸ் ஆகியோர் பார்வையிட்டனர்.
இந்த தேர்வை தொடர்ந்து மே மாதம் 2-ம் கட்ட தேசிய திறனறிவு தேர்வு நடைபெறும். இந்த 2 தேர்வுகளிலும் வெற்றி பெறும் மாணவ- மாணவிகளுக்கு 11-ம் வகுப்பில் இருந்து முனைவர் பட்டம் பெறும் வரை மாதந்தோறும் மத்திய அரசால் கல்வி உதவித்தொகை வழங்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.