தினத்தந்தி புகார் பெட்டி
தினத்தந்தி புகார் பெட்டிக்கு 89398 18888 என்ற ‘வாட்ஸ்-அப்’ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-
தினத்தந்தி புகார் பெட்டிக்கு நன்றி
திருச்சி மாவட்டம், முசிறி முதல் மணமேடு வரையிலான தேசிய நெடுஞ்சாலையில் உயிர்ப்பலி வாங்க காத்திருக்கும் பள்ளங்களை மூட சம்பந்தப்பட்ட நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கடந்த 2-ந்தேதி தினத்தந்தி புகார் பெட்டியில் செய்தி வெளியிடப்பட்டது. இதன் எதிரொலியாக திருச்சி கோட்ட தேசிய நெடுஞ்சாலைத்துறையினர் மற்றும் பணியாளர்கள் முசிறி முதல் மணமேடு வரையிலான தேசிய நெடுஞ்சாலையில் இருந்த பள்ளங்களை சரிசெய்தனர். இதையடுத்து செய்தி வெளியிட்ட தினத்தந்தி புகார் பெட்டிக்கும், சரி செய்த அதிகாரிகளுக்கும் வாகன ஓட்டிகள், பொதுமக்கள் நன்றி தெரிவித்தனர்.
சரவணன், துறையூர், திருச்சி.
சுகாதார சீர்கேடு
பெரம்பலூர் மாவட்டம், ஆலத்தூர் தாலுகா கொளக்காநத்தம் கிராமத்தில் 5 மற்றும் 6-ம் வார்டுகளுக்கு இடையே பிரதான சாலையின் ஒருபுறம் கழிவுநீர் கால்வாய் கட்டப்பட்டுள்ளது. ஆனால் மறுபுறம் கழிவுநீர் கால்வாய் அமைக்காமல் அந்த இடத்தை சிலர் ஆக்கிரமிப்பு செய்துள்ளனர். இதனால் மழைக்காலங்களில் குடியிருப்பு பகுதிகளில் கழிவுநீர் புகுந்து விடுகிறது. மேலும், அதன் அருகே உள்ள மற்றொரு கால்வாயில் குப்பைகள் தேங்கி இருப்பதால் கழிவுநீர் செல்ல முடியாமல் தேங்கி உள்ளது. இதனால் அப்பகுதியில் சுகாதார சீர்கேடு நிலவி வருகிறது. எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
செல்வராஜூ, பெரம்பலூர்.
புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவனையின் அவல நிலை
புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவனையின் விபத்து மற்றும் அவசர சிகிச்சை உள்நோயாளிகள் பிரிவு 2-வது மாடியில் உள்ள கழிவறையில் பெண்கள் கழிவறையில் தண்ணீர் வருவதில்லை என கூறி குளுகோஸ் ஏற்றும் டியூப்பால் கழிவறை கதவு கட்டப்பட்டு இரண்டு வாரங்களுக்கு மேலாக உள்ளது. 203, 204-வது வார்டுகளில் உள்ள நோயாளிகளும் உடனிருப்போரும் ஆண்கள், பெண்கள் இருவரும் ஒரே கழிவறையை பயன்படுத்தி வருவதால் மிகுந்த சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர். அது மட்டுமல்லாது மற்றொரு பெண்கள் பயன்படுத்தும் கழிவறையில் மின்விளக்கு ஒன்றுகூட எரியாததால் இரவு நேரங்களில் கழிப்பறையை பெண்கள் அச்சத்துடனேயே பயன்படுத்தி வருகின்றனர். செவிலியர்கள் பணிபுரியும் அறையில் உள்ள கழிவறைகளிலும் தண்ணீர் வரவில்லை. இது சம்பந்தமாக நிர்வாகத்திடம் பல முறை சொல்லியும் எவ்வித நடவடிக்கையும் இல்லை என்று புலம்புகின்றனர். ஒரு சில வார்டுகளில் உள்ள கழிப்பறைகளில் அதாவது இந்தியன் வெஸ்டர்ன் என 2 கழிவறைகள் உள்ள நிலையில் அதிலும் ஒன்று பயன்பாட்டில் இல்லாமல் உள்ளது. இதுகுறித்து சம்பந்தப்பட்ட மருத்துவ அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என நோயாளிகள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பொதுமக்கள், புதுக்கோட்டை
பஸ் வசதி வேண்டும்
கரூர் மாவட்டம், குளித்தலை வட்டம், தோகைமலை ஒன்றியம் முதலைப்பட்டி கிராமத்தில் சுமார் 1500 குடும்பங்கள் உள்ளன. இந்த கிராமத்திற்கு குளித்தலையில் இருந்தும் தோகைமலையில் இருந்தும் பஸ் வசதி கிடையாது. இதனால் கிராம மக்கள் குளித்தலை வட்டாட்சியர் அலுவலகம், தோகைமலை ஒன்றிய அலுவலகம் செல்லவேண்டுமானால் திருச்சி சென்று தான் போக வேண்டிய சூழ்நிலை உள்ளது. இதனால் சுமார் 30 கிலோமீட்டர் தூரம் அலைய வேண்டிய சூழ்நிலை உள்ளது. எனவே முதலைப்பட்டி கிராமத்திற்கு குளித்தலையில் இருந்தும் தோகைமலையிலிருந்தும் பஸ்கள் இயக்க போக்குவரத்துத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பொதுமக்கள், குளித்தலை, கரூர்.
குவிந்து கிடக்கும் குப்பைகள்
திருச்சி பீமநகர் பகுதியில் ஹீபர் ரோடு பகுதியில் இடது புறம் குப்பைகள் ஏராளமாக குவிந்து கிடக்கிறது. மேலும் பல ஆண்டுகளாக கிடப்பில் போடப்பட்ட கார்கள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. இதனால் அந்த பகுதியில் கடும் துர்நாற்றம் வீசி வருகிறது. மேலும் கால்நடைகள் அந்த குப்பைகளை கிளறி விடுகிறது. இதனால் கொசுக்கள் உற்பத்தியாகி நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து சம்பந்தப்பட்ட மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பொதுமக்கள், திருச்சி.