நாகை மீனவர்கள் 9 பேரை கண்டுபிடிக்க நாடாளுமன்றத்தில் வலியுறுத்துவேன்
2007-2008-ம் ஆண்டுகளில் மாயமான நாகை மீனவர்கள் 9 பேரை கண்டுபிடிக்க நாடாளுமன்றத்தில் வலியுறுத்துவேன் என செல்வராஜ் எம்.பி. கூறினார்.
வெளிப்பாளையம்:
2007-2008-ம் ஆண்டுகளில் மாயமான நாகை மீனவர்கள் 9 பேரை கண்டுபிடிக்க நாடாளுமன்றத்தில் வலியுறுத்துவேன் என செல்வராஜ் எம்.பி. கூறினார்.
மீனவர்கள் மாயம்
மீனவம் காப்போம் மக்கள் இயக்கத்தினர் செல்வராஜ் எம்.பி.யை சந்தித்து ஒரு கோரிக்கை மனு அளித்தனர். அந்த மனுவை பெற்று கொண்டு அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
மீனவம் காப்போம் இயக்கம் சார்பில் நேற்று கோரிக்கை மனு கொடுத்தனர். அந்த மனுவில், நாகை மாவட்டம் அக்கரைப்பேட்டை மீனவ கிராமத்தில் இருந்து மணிவண்ணன், செண்பகம், சதீஷ், நாகராஜ் ஆகிய 4 மீனவர்கள் கடந்த 2007-ம் ஆண்டு அக்டோபர் மாதம் 18-ந் தேதி கடலுக்கு மீன்பிடிக்கச் சென்றுவிட்டு 21-ந்தேதி அன்று கரை திரும்பி இருக்க வேண்டும். ஆனால் இதுவரை கரை திரும்பவில்லை.
ரூ.1 லட்சம் நிவாரணம்
இது குறித்து நாகை டவுன் போலீஸ் நிலையம் மற்றும் மீன்வளத்துறையில் புகார் செய்யப்பட்டுள்ளது. ஆனால் இதுவரை காணாமல் போன மீனவர்களை கண்டுப்பிடிக்க முடியவில்லை. அரசு மீனவர்களின் குடும்பத்திற்கு தலா ரூ.1 லட்சம் நிவாரணம் வழங்கப்பட்டுள்ளது.
இதேபோல கடந்த 2008-ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் 23-ந் தேதி செருதூர் மீனவ கிராமத்தில் இருந்து சிவசுப்பிரமணியன், குப்புசாமி, ராஜீவ்காந்தி, ரமேஷ், பாலகிருஷ்ணன் ஆகிய 5 பேரும் கடலுக்குள் மீன்பிடிக்கச் சென்றனர். இவர்களும் இதுவரை கரை திரும்பவில்லை. இது குறித்து கீழையூர் போலீசில் புகார் கொடுக்கப்பட்டுள்ளது.
நாடாளுமன்றத்தில் வலியுறுத்துவேன்
இதுவரை மாயமான 9 மீனவர்கள் குறித்து எந்தவித தகவலும் கிடைக்கவில்லை. இந்த நிலையில் இலங்கையில் இருந்து வெளியிடப்பட்ட புகைப்படத்தில் மாயமான 9 மீனவர்களும் இலங்கை சிறையில் இருக்கலாம் என சந்தேகம் ஏற்பட்டுள்ளது. இதனால் மீனவர்களை மீட்க மத்திய அரசை வலியுறுத்த வேண்டும் என தெரிவித்துள்ளனர்.
வருகிற மார்ச் மாதம் நடைபெறும் நாடாளுமன்ற கூட்டத் தொடரில் மாயமான மீனவர்களை கண்டுபிடிக்க வலியுறுத்துவேன். மாயமான மீனவர்களின் உறவினர்கள் கொடுத்த ஆதாரங்களை வைத்து மீனவர்களை மீட்க நடவடிக்கை எடுப்பேன். இவ்வாறு அவர் கூறினார்.
பேட்டியின் போது தமிழ்நாடு ஏ.ஐ.டி.யூ.சி மீனவத் தொழிலாளர் சங்க மாநில பொதுச் செயலாளர் சின்னதம்பி, தமிழ்நாடு விவசாய தொழிலாளர் சங்க பாஸ்கரன் உள்பட பலர் உடனிருந்தனர்.