உத்தனப்பள்ளி அருகே பஸ்சில் கடத்தி வந்த 26 கிலோ கஞ்சா பறிமுதல் பெண் கைது
உத்தனப்பள்ளி அருகே பஸ்சில் கடத்தி வந்த ரூ5 லட்சத்து 20 ஆயிரம் மதிப்புள்ள 26 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக பெண் கைது செய்யப்பட்டார்.;
ராயக்கோட்டை:
உத்தனப்பள்ளி அருகே பஸ்சில் கடத்தி வந்த ரூ.5 லட்சத்து 20 ஆயிரம் மதிப்புள்ள 26 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக பெண் கைது செய்யப்பட்டார்.
போலீசார் கண்காணிப்பு
கிருஷ்ணகிரி மாவட்டம் உத்தனப்பள்ளி பகுதியில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் கடத்தி செல்லப்படுகிறதா? என்று கண்காணிக்குமாறு போலீசாருக்கு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சாய் சரண் தேஜஸ்வி உத்தரவிட்டார்.
அதன்பேரில் தேன்கனிக்கோட்டை துணை போலீஸ் சூப்பிரண்டு கிருத்திகா மற்றும் ராயக்கோட்டை இன்ஸ்பெக்டர் சுப்பிரமணி, சப்-இன்ஸ்பெக்டர்கள் சிவராஜ், கார்த்திகேயன், சரவணன், அமுதா மற்றும் போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
பெண் கைது
இந்த நிலையில் துப்புகானப்பள்ளி பஸ் நிறுத்தம் அருகில் அந்த வழியாக வந்த பஸ்சில் இருந்து ஒரு பெண் மூட்டையுடன் கீழே இறங்கினார். இதனால் சந்தேகம் அடைந்த போலீசார் அந்த மூட்டையை பிரித்து சோதனை செய்தனர். அதில் 26 கிலோ கஞ்சா கடத்தி வந்தது தெரிந்தது.
இதுதொடர்பாக கிருஷ்ணகிரி அருகே தீர்த்தத்தை சேர்ந்த கிட்டப்பா மகள் முனியம்மாள் (வயது 32) என்பவரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது ஆந்திர மாநிலம் விசாகப்பட்டணத்தில் இருந்து கஞ்சா கடத்தியது தெரியவந்தது. இதையடுத்து அவரிடம் இருந்து ரூ.5 லட்சத்து 20 ஆயிரம் மதிப்புள்ள கஞ்சா, செல்போன் மற்றும் ரூ.3,500 பறிமுதல் செய்யப்பட்டது. தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.