மறியல், முற்றுகை என பரபரப்புக்கு பஞ்சம் இல்லாத உள்ளாட்சி அலுவலகங்கள்
மறியல், முற்றுகை என பரபரப்புக்கு பஞ்சம் இல்லாத வகையில் உள்ளாட்சி அலுவலகங்கள் பரபரப்புடன் காணப்பட்டன. தீக்குளிப்பேன் என்று வேட்பாளர்கள் மிரட்டிய சம்பவமும் அரங்கேறியது.;
பழனி:
அ.தி.மு.க. முற்றுகை
பழனி அருகே உள்ள கீரனூர் பேரூராட்சியில் உள்ள 15 வார்டுகளில் போட்டியிட தி.மு.க., அ.தி.மு.க., எஸ்.டி.பி.ஐ. உள்பட பல்வேறு அரசியல் கட்சிகள், சுயேச்சை என 71 வேட்புமனுக்கள் தாக்கல் செய்தனர்.
இதனையடுத்து நேற்று வேட்புமனு பரிசீலனை கீரனூர் பேரூராட்சி அலுவலகத்தில் நடந்தது. அப்போது எஸ்.டி.பி.ஐ. கட்சி சார்பில் 9, 10-வது வார்டுகளில் போட்டியிட்டவர்களின் வேட்பு மனுக்கள் நிராகரிக்கப்பட்டன.
இதேபோல் அ.தி.மு.க.வை சேர்ந்த 2 பேர், தி.மு.க., நாம் தமிழர் கட்சி, சுயேச்சை தலா ஒருவர் என மொத்தம் 7 பேரின் வேட்புமனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன.
இந்தநிலையில் போதிய காரணம் இன்றி வேட்புமனுக்கள் நிராகரிக்கப்பட்டதாக கூறி அ.தி.மு.க. மற்றும் எஸ்.டி.பி.ஐ. கட்சியினர் பேரூராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதையடுத்து கீரனூர் போலீசார், போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அதைத்தொடர்ந்து அங்கிருந்து அவர்கள் கலைந்து சென்றனர்.
இது குறித்து சம்பந்தப்பட்ட பேரூராட்சி செயல்அலுவலரிடம் கேட்டபோது, வேட்புமனுக்களில் முறையான ஆவணங்கள் இல்லை என்பதால் தள்ளுபடி செய்யப்பட்டது என்றார்.
குற்றச்சாட்டு
கொடைக்கானல் நகர்மன்ற உறுப்பினர் பதவிக்காக, பல்வேறு அரசியல் கட்சிகள் மற்றும் சுயேட்சைகள் சார்பில் மொத்தம் 179 வேட்பு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.
இதில் 19 வயது மாணவியின் மனுவும் ஒன்று ஆகும். அவருக்கு வயது குறைவு என்ற காரணத்தினால் அவருடைய வேட்பு மனு தள்ளுபடி செய்யப்பட்டது. இதேபோல் மொத்தம் 9 மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன.
இதற்கிடையே வேட்புமனு பரிசீலனையின்போது முன்னாள் நகர் மன்ற தலைவர்கள் முகமது இப்ராகிம், எட்வர்டு ஆகியோர் ஒருவருக்கொருவர் பரஸ்பரம் குற்றம் சாட்டினர்.
மேலும் அவர்கள் தனித்தனியாக மனுக்களையும் தாக்கல் செய்தனர். இதனை விசாரணை செய்த நகராட்சி ஆணையர் நாராயணன், 2 பேரின் வேட்பு மனுக்களும் ஏற்று கொள்ளப்பட்டதாக அறிவித்தார்.
தீக்குளிப்பேன் என மிரட்டல்
நிலக்கோட்டை பேரூராட்சிக்கு உட்பட்ட 15 வார்டுகளில் போட்டியிட தாக்கல் செய்த வேட்பு மனுக்கள் மீதான பரிசீலனை, நிலக்கோட்டை பேரூராட்சி தேர்தல் நடத்தும் அலுவலர் சுந்தரி தலைமையில் நடந்தது.
இதில் 3-வது வார்டில், மொத்தம் 9 பேர் வேட்பு மனுதாக்கல் செய்திருந்தனர். அந்த வார்டில், சுயேச்சையாக பட்டம் என்பவர் மனுதாக்கல் செய்திருந்தார். இவர், அரசுக்கு வரிபாக்கி வைத்திருப்பதாக கூறி, அவருடைய மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் என்று அதே வார்டில் போட்டியிடும் தி.மு.க. நகர துணை செயலாளர் ஜோசப் கோவில் பிள்ளை வலியுறுத்தினார். அப்போது அவர்களுக்கிடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.
மனுவை தள்ளுபடி செய்தால் தீக்குளிப்பேன் என்று பட்டமும், மனுவை தள்ளுபடி செய்யாவிட்டால் தீக்குளிப்பேன் என்று ஜோசப் கோவில் பிள்ளையும் ஆவேசமாக அதிகாரிகளிடம் பேசி மிரட்டல் விடுத்தனர்.
ஒரு கட்டத்தில், பட்டம் தனது சட்டையை கழற்றி அங்கு திடீர் போராட்டத்தில் ஈடுபட்டார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
இதனையடுத்து அங்கு வந்த நிலக்கோட்டை போலீசார் 2 பேரையும் அங்கிருந்து வெளியேற்றினர். இதற்கிடையே பட்டத்தின் வேட்பு மனு ஏற்று கொள்ளப்பட்டது. சுயேச்சை வேட்பாளர் நாகராஜின் வேட்பு மனு உள்பட 11 பேரின் மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன.
சாலை மறியல்
ஒட்டன்சத்திரம் நகராட்சியில் மொத்தம் 18 வார்டுகள் உள்ளன. இங்கு போட்டியிட 127 பேர் வேட்பு மனு தாக்கல் செய்திருந்தனர். இந்த மனுக்கள் மீதான பரிசீலனை ஒட்டன்சத்திரம் நகராட்சி அலுவலகத்தில் உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்கள் ரவிச்சந்திரன், ரவிசங்கர் ஆகியோர் தலைமையில் நடந்தது.
இதில் அ.தி.மு.க.வினர் 6 பேரின் மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன. இதுகுறித்து தகவல் அறிந்த ஒன்றிய செயலாளர் என்.பி நடராஜ், நகர செயலாளர் நடராஜ் ஆகியோர் அங்கு திரண்டனர். பின்னர் அவர்கள் வேட்பு மனு தள்ளுபடி செய்யப்பட்டதை கண்டித்து நகராட்சி அலுவலகம் முன்பு ஒட்டன்சத்திரம்-பழனி சாலையில் மறியலில் ஈடுபட்டனர்.
இதேபோல் பாரதீய ஜனதா கட்சியினர் 4 பேரின் மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டதை கண்டித்த அந்த கட்சியினரும் மறியல் செய்தனர். இதனையடுத்து போலீசார் குவிக்கப்பட்டனர். இதனையடுத்து அ.தி.மு.க., பாரதீய ஜனதா கட்சியினரிடம் பேச்சுவார்த்தை நடத்தி அங்கிருந்து கலைந்து போக செய்தனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.
ஒட்டன்சத்திரம் நகராட்சியில் 39 மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில், 88 மனுக்கள் ஏற்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.