நொய்யல்
கரூர் மாவட்டம் நொய்யல் ஈவேரா அரசு மேல்நிலைப்பள்ளி, சேமங்கி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி, குளத்துபாளையம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி, இளங்கோநகர் அரசு உதவி பெறும் ஆரம்பப்பள்ளி, கரைப்பாளையம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி, திருக்காடுதுறை ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி, வேட்டமங்கலம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி, கூலக்கவுண்டனூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி, தவிட்டுப்பாளையம் அரசு நடுநிலைப்பள்ளி மற்றும் ஓலப்பாளையம், குந்தாணிபாளையம், மூலிமங்கலம், புன்னம்சத்திரம், மசக்கவுண்டன் புதூர், காகிதபுரம், அம்மாமண்டபம், மூர்த்திபாளையம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் நேற்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மெகா கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெற்றது. இதில் ஓலப்பாளையம் ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவ அலுவலர்கள் மற்றும் மருத்துவர்கள், சுகாதார செவிலியர்கள், சுகாதார ஆய்வாளர்கள் மற்றும் உதவியாளர்கள் கொண்ட குழுவினர் முகாமில் கலந்துகொண்ட 18 வயதுக்கு மேற்பட்ட ஆண்கள் மற்றும் பெண்கள், பாலூட்டும் தாய்மார்கள், மாற்றுத்திறனாளிகள் ஆகியோருக்கு முதல் மற்றும் இரண்டாம் தவணை தடுப்பூசி போட்டனர். அதேபோல் 100 சதவீதம் பேரும் தடுப்பூசி போட்டுக் கொள்ளும் வகையில் சுகாதாரத்துறை மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் கொண்ட குழுவினர் ஒவ்வொரு பகுதியிலும் வீடு வீடாகச் சென்று தடுப்பூசி போடாத முதியவர்கள், மாற்றுத்திறனாளிகள் மற்றும் 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு முதல் மற்றும் இரண்டாம் தவணை தடுப்பூசி போட்டனர். முகாமில் அந்தந்த பகுதிகளை சேர்ந்த 18 வயதுக்கு மேற்பட்ட ஆண்கள் மற்றும் பெண்கள் கலந்துகொண்டு தடுப்பூசி போட்டுக் கொண்டனர்.