அரவக்குறிச்சி பேரூராட்சி ஒரு கண்ணோட்டம்

அரவக்குறிச்சி பேரூராட்சி ஒரு கண்ணோட்டம் பார்ப்போம்.;

Update: 2022-02-05 16:54 GMT
கரூர்
அரவக்குறிச்சி பேரூராட்சி
அரவக்குறிச்சி பேரூராட்சி 1-4-1963ல் பேரூராட்சியாக தரம் உயர்த்தப்பட்டு செயல்பாட்டிற்கு வந்தது. 
கடந்்த 9-6-1969 முதல் முதல்நிலை பேரூராட்சியாக தரம் உயர்த்தப்பட்டு செயல்பட்டு வந்தது. 2.3.2016 முதல் சிறப்பு நிலை பேரூராட்சியாக தரம் உயர்த்தப்பட்டது. பேரூராட்சி பகுதிகளுக்கு குடிநீர் தேவையை பூர்த்தி செய்வதற்கு 1991-ம் ஆண்டு அமராவதி கூட்டுக்குடிநீர் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டு அரவக்குறிச்சி அருகே அமராவதி ஆற்றுப்படுகையில் இருந்து கிணறு தோண்டப்பட்டு மின்மோட்டார் மூலம் நீர் உறிஞ்சப்பட்டு அரவக்குறிச்சி மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் சேமிக்கப்பட்டு பொதுமக்களுக்கு வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. 
அதோடு மட்டுமல்லாமல் குடிநீர் தேவையை பூர்த்தி செய்ய 31-7-2002ல் காவிரி கூட்டு குடிநீர் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டு, நொய்யல் அருகே மரவாபாளையம் காவிரி ஆற்றில் நீரேற்று நிலையம் அமைக்கப்பட்டு அங்கிருந்து மின்மோட்டார் மூலமாக தண்ணீர் உறிஞ்சப்பட்டு அரவக்குறிச்சியில் உள்ள தரைமட்ட நீர்த்தேக்க தொட்டியில் குடிநீர் சேகரம் செய்யப்பட்டு அரவக்குறிச்சி பகுதி மக்களுக்கு  நீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. மேலும் காமக்காபட்டி, அரவக்குறிச்சி பேரூராட்சி அருகில், கரடிப்பட்டி, மாரியம்மன் கோவில் தெரு ஆகிய பகுதிகளில் அமைக்கப்பட்டுள்ள மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிகளில் இருந்தும் குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. 
பேரூராட்சி தலைவர்களாக...
தற்போது அரவக்குறிச்சி பேரூராட்சி பகுதிகளில் மொத்தம் 15 வார்டுகள் உள்ளது. பேரூராட்சியின் மக்கள் தொகை 5,320 ஆண்களும், 5,918 பெண்களும் என  மொத்தம் 11,238 வாக்காளர்கள் உள்ளனர். அரவக்குறிச்சி பேரூராட்சி தலைவர்களாக ஆரம்ப காலத்தில் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த ஜெயினுலாபுதீன், 1996 முதல் 2001 வரை காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த இந்திராணி தர்மலிங்கம், 2001 முதல் 2006 வரை காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த அருக்காத் தாள் கருப்புசாமி, 2006 முதல் 2011 வரை தி.மு.க.வைச் சேர்ந்த ம.அண்ணாதுரை, 2011 முதல் 2016 வரை அ.தி.மு.க.வைச் சேர்ந்த என்.மணிகண்டன் ஆகியோர் அரவக்குறிச்சி பேரூராட்சி தலைவர்களாக பதவி வகித்து வந்தனர். 
தொழிற்சாலை அமைக்க வேண்டும்
தற்போது அரவக்குறிச்சி பேரூராட்சி தலைவர் பதவி பெண் (பொது) ஒதுக்கப்பட்டுள்ளது. அரவக்குறிச்சி மற்றும் சுற்றுவட்டார பகுதி மக்கள் பெரும்பாலும் விவசாயத்தையே நம்பி வாழ்கிறார்கள். அரவக்குறிச்சி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் எந்த ஒரு தொழிற்சாலையும் கிடையாது. புதிய பஸ் நிலையம் அமைக்க வேண்டி பல ஆண்டுகளாக கோரிக்கை வைத்தும் இதுவரை நிறைவேறவில்லை. அரவக்குறிச்சி பகுதியில் உள்ள பொதுமக்கள் வேலைக்கு கரூர் மற்றும் வெளியூர்களுக்கு சென்று வருகின்றனர். அரவக்குறிச்சியில் தொழிற்சாலை அமைந்தால் அரவக்குறிச்சி தொகுதி மக்களுக்கு அது வாழ்வாதாரமாக விளங்கும். எனவே இப்பகுதியில் தொழிற்சாலை அமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 

மேலும் செய்திகள்