பருவம் தவறிய மழையால் மக்காச் சோள பயிர்கள் மகசூல் பாதிக்கப்பட்டுள்ளதாக விவசாயிகள் கவலை

பருவம் தவறிய மழையால் மக்காச் சோள பயிர்கள் மகசூல் பாதிக்கப்பட்டுள்ளதாக விவசாயிகள் கவலை

Update: 2022-02-05 16:08 GMT
மடத்துக்குளம்:
 மடத்துக்குளம் பகுதியில் பெய்த பருவம் தவறிய மழையால் மக்காச் சோள பயிர்கள் மகசூல் பாதிக்கப்பட்டுள்ளதாக விவசாயிகள் கவலை தெரிவித்துள்ளனர்.
புதிய ஆயக்கட்டு 
திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் ஆயக்கட்டு பகுதியில் நெல், கரும்பு முக்கிய பயிராக உள்ளது. இதற்கு அடுத்ததாக விவசாயிகளுக்கு கை கொடுப்பதாகவும், குறைவான பாசன நீரில் சாகுபடி செய்யக்கூடியதாகவும் மக்காச்சோள பயிர் உள்ளது. அமராவதி புதிய ஆயக்கட்டு பகுதியில் 2 பருவத்தில் பல 100 ஏக்கர் பரப்பில் மக்காச்சோளம் சாகுபடி நடக்கிறது. கடந்த ஆண்டு செப்டம்பர், அக்டோபர் மாதம் மடத்துக்குளம் வேடபட்டி கண்ணாடிப்புத்தூர் உள்ளிட்ட பகுதியில் மக்காச்சோளம் சாகுபடி செய்யப்பட்டது.
பயிர்கள் வளர்ந்த நிலையில், நவம்பர், டிசம்பர் மாதத்தில் பருவம் தவறிய மழைப்பொழிவு ஏற்பட்டது. தொடர்ந்து பல நாட்கள் மழை பெய்த காரணத்தால் விளை நிலங்களில் நீர் தேங்கியது. முளைத்து வந்த பயிர்களின் இலைகளில் நீர் உட்புகுந்தது. இதனால் பயிர்களின் வளர்ச்சி மற்றும் மகசூல் பாதிக்கப்பட்டுள்ளதாக விவசாயிகள் தெரிவித்துள்ளனர் 
விலை குறைவு 
இதுகுறித்து மடத்துக்குளம் பகுதியில் உள்ள விவசாயிகள் கூறிய தாவது:- 
மக்காச்சோளம் சாகுபடி தொடங்கி அறுவடை வரை ரூ.30 ஆயிரம் முதல் ரூ.35 ஆயிரம் வரை செலவிட்டு உள்ளோம். தற்போது அறுவடை நடக்கும் நிலையில் ஒரு ஏக்கருக்கு 30 மூட்டை அதாவது 3,000 கிலோ வரை மகசூல் எதிர்பார்த்தோம். ஆனால் பயிர்கள் பூக்கும் பருவத்தில் பெய்த மழை காரணமாக பருவநிலை மாறி பயிர்கள்  நீரில் நனைந்து விளைச்சல் பாதிக்கப்பட்டது. இதனால் சராசரியாக 20 மூட்டை அதாவது 2ஆயிரம கிலோ மட்டுமே மகசூல் கிடைத்துள்ளது. ஒரு ஏக்கர் பரப்பிற்கு உத்தேசமாக 1,000 கிலோ வரை மகசூல் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
 விலையும் கைகொடுக்கவில்லை ஒரு மூட்டை ரூ.2 ஆயிரத்தை கடந்து விற்பனையாகும் என எதிர்பார்த்தோம். ஆனால் தற்போதைய நிலவரப்படி சராசரியாக ரூ.1,500  தான் கொள்முதல் செய்கின்றனர். இதனால் சாகுபடி செலவுக்கு கூட கட்டுப்படியாகாத நிலையில்  உள் ளோம். விளைச்சலில் பாதிப்பு, விலையிலும் பாதிப்பு அடைந்துள்ள விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்க வேண்டும் அல்லது இந்த பிரச்சினைக்கு நிரந்தர தீர்வாக அரசே ஒரு நிலையான விலையை நிர்ணயம் செய்து வேண்டும. 
இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

மேலும் செய்திகள்