பணிநீக்கம் செய்யப்பட்ட அரசு ஊழியர் கைது
கலெக்டர் அலுவலகம் முன்பு தீக்குளிக்க முயன்ற பணிநீக்கம் செய்யப்பட்ட அரசு ஊழியர் கைது
திருப்பத்தூர்
திருப்பத்துார் ஹவுசிங் போர்டு பகுதியை சேர்ந்தவர் தன்வீர் அகமது (வயது 36). இவர் திருப்பத்துாரில் உள்ள ஊராட்சிகள் உதவி இயக்குனர் அலுவலகத்தில் உதவியாளராக பணிபுரிந்து வந்தார்.
கடந்த ஆண்டு ஜூலை 8-ந் தேதி தன்வீர் அகமது துறை ரீதியாக பணிநீக்கம் செய்யப்பட்டார்.
இந்த நிலையில், தனக்கு மீண்டும் பணி வழங்கக் கோரி இன்று திருப்பத்துார் கலெக்டர் அலுவலகத்திற்கு மனு அளிக்க தன்வீர் அகமது வந்திருந்தார்.
அப்போது தன்வீர் அகமது தான் மறைத்து வைத்திருந்த மண்ணெண்ணையை தன் உடல் மீது ஊற்றி தீக்குளிக்க முயன்றார்.
அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் உடனே அவரிடம் இருந்த மண்ணெண்ணெய் கேனை பறிமுதல் செய்து தடுத்தனர். பின்னர் தற்கொலைக்கு முயன்றதாக திருப்பத்தூர் நகர போலீசார் வழக்குப்பதிவு செய்து தன்வீர் அகமதுவை கைது செய்தனர்.
இந்த சம்பவத்தால் கலெக்டர் அலுவலகத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.