பதவி உயர்வு வழங்கக்கோரி ஆசிரியர்கள் உள்ளிருப்பு போராட்டம்

பணி மூப்பு அடிப்படையில் பதவி உயர்வு வழங்கக்கோரி ஆசிரியர்கள் உள்ளிருப்பு போராட்டம் நடத்தினர்.

Update: 2022-02-05 13:30 GMT
ஊட்டி

பணி மூப்பு அடிப்படையில் பதவி உயர்வு வழங்கக்கோரி ஆசிரியர்கள் உள்ளிருப்பு போராட்டம் நடத்தினர்.

கலந்தாய்வு

நீலகிரி மாவட்டத்தில் உள்ள அரசு பள்ளிகளில் காலியாக உள்ள ஆங்கில பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களுக்கு பணி மூப்பு அடிப்படையில் பதவி உயர்வு அளித்து ஆசிரியர்களை நியமிப்பதற்கான கலந்தாய்வு, ஊட்டி அப்பர் பஜார் நகராட்சி நடுநிலை பள்ளியில் நேற்று நடைபெற்றது. கலந்தாய்வை குன்னூர், கூடலூர் கல்வி மாவட்ட அலுவலர்கள் நடத்தினர்.

2 கல்வி மாவட்டங்களில் இருந்து ஆங்கில பட்டதாரி ஆசிரியர்கள் கலந்துகொண்டனர். கூடலூர் 1-ம் மைல் ஊராட்சி ஒன்றிய நடுநிலை பள்ளியில் ஆங்கில பட்டதாரி ஆசிரியர் பணியிடம் காலியாக இருந்தது. இதற்கு கலந்தாய்வில் ஆசிரியர்கள் சுரேஷ்குமார், ஷாஜஹான், தலைமை ஆசிரியை சாஜிதா பேகம் ஆகிய 3 பேர் தகுதி அடிப்படையில் கலந்துகொண்டனர். 

போராட்டம்

ஆனால், கலந்தாய்வின்போது அவர்கள் மலையாள வழியில் பயின்று வந்ததால் ஆங்கில பட்டதாரி ஆசிரியர் பதவி உயர்வுக்கு தமிழ் வழி பள்ளியில் நியமிக்க தகுதி இல்லை என்று நிராகரிக்கப்பட்டதாக தெரிகிறது. இதனால் அதிர்ச்சி அடைந்த ஆசிரியர்கள் கலந்தாய்வு நடந்த இடத்தில் தரையில் அமர்ந்து உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.  

இதுகுறித்து பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகள் கூறும்போது, ஆங்கில பட்டதாரி ஆசிரியர் பணியிடத்திற்கு ஆசிரியர் தேர்வு செய்வதில் உள்ள பிரச்சினை குறித்து உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு உள்ளது என்றனர்.

பணி மூப்பு அடிப்படையில்...

இதுகுறித்து தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மாவட்ட செயலாளர் ஜெயசீலன் கூறும்போது, கூடலூரில் மலையாளம், தமிழ் வழியில் பாடம் கற்பிக்கப்படுகிறது. மலையாள வழியில் படித்தாலும் ஆசிரியர்கள் ஆங்கில பட்டம் பெற்று இடைநிலை ஆசிரியர்களாக பணிபுரிகின்றனர். பணிமூப்பில் 3 பேர் தகுதி அடிப்படையில் கலந்தாய்வில் கலந்துகொண்டு, அதில் ஒருவருக்கு பணி வழங்காமல் நிராகரிப்பது கண்டிக்கத்தக்கது.

மலையாள வழியில் பயின்ற அவர்களை தமிழ் வழி பள்ளியில் நியமனம் செய்ய நடைமுறை இல்லை என்று அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். பதவி உயர்வுக்கு முன்னுரிமை அளிக்காததால் போராட்டத்தில் ஈடுபட்டு உள்ளோம். இதற்கு உரிய நடவடிக்கை எடுத்து பணிமூப்பு அடிப்படையில் 3 பேரில் ஒருவரை நியமனம் செய்ய வேண்டும் என்றார்.

மேலும் செய்திகள்