பதற்றமான வாக்குச்சாவடிகளில் கூடுதல் பாதுகாப்பு- தேர்தல் பார்வையாளர் அறிவுறுத்தல்
தூத்துக்குடியில் பதற்றமான வாக்குச்சாவடிகளில் கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகளை மேற்கொள்ள வேண்டும் என மண்டல தேர்தல் அலுவலர்களுக்கு, தேர்தல் பார்வையாளர் அதுல் ஆனந்த் அறிவுறுத்தினார்.
தூத்துக்குடி:
தூத்துக்குடியில் பதற்றமான வாக்குச்சாவடிகளில் கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகளை மேற்கொள்ள வேண்டும் என மண்டல தேர்தல் அலுவலர்களுக்கு, தேர்தல் பார்வையாளர் அதுல் ஆனந்த் அறிவுறுத்தினார்.
உள்ளாட்சி தேர்தல்
தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள மாநகராட்சி, 3 நகராட்சி, 18 பேரூராட்சிகளுக்கான நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வருகிற 19-ந் தேதி நடக்கிறது. இதற்கான வேட்பு மனு தாக்கல் நேற்று முன்தினம் முடிவடைந்தது. தொடர்ந்து வேட்பு மனுக்கள் மீதான பரிசீலனை நேற்று நடந்தது.
இந்த நிலையில் தேர்தல் பணிகளை கண்காணிப்பதற்காக தேர்தல் பார்வையாளராக தொழிலாளர் நலத்துறை ஆணையர் அதுல் ஆனந்த் நியமிக்கப்பட்டு உள்ளார். அவர் நேற்று காலை தூத்துக்குடி மாநகராட்சி அலுவலகத்துக்கு வந்தார். அங்கு மாநகராட்சி தேர்தல் நடத்தும் அலுவலர் சாருஸ்ரீயுடன் ஆலோசனை நடத்தினார்.
ஆலோசனை கூட்டம்
மாநகராட்சியில் உள்ள 60 வார்டுகளுக்கு வாக்குப்பெட்டிகளை கொண்டு செல்வதற்காக 16 மண்டல அலுவலர்கள் நியமிக்கப்பட்டு உள்ளனர். இந்த அலுவலர்களுடனான ஆலோசனை கூட்டம் மாநகராட்சி தேர்தல் நடத்தும் அலுவலர் சாருஸ்ரீ முன்னிலையில் மாநகராட்சி அலுவலகத்தில் நடந்தது. கூட்டத்தில் தேர்தல் பார்வையாளர் அதுல் ஆனந்த் கலந்து கொண்டு அறிவுரைகளை வழங்கினார்.
அப்போது, மண்டல அலுவலர்கள் அனைவரும் ஏற்கனவே தேர்தலில் பணியாற்றி அனுபவம் உள்ளவர்கள். நீங்கள் சிறப்பாக பணியாற்ற வேண்டும். வாக்குப்பதிவு எந்திரங்களை வாக்குச்சாவடிக்கு உரிய நேரத்தில் கொண்டு செல்வது, வாக்குப்பதிவு முடிந்தபிறகு பத்திரமாக சேகரித்து வாக்கு எண்ணிக்கை மையத்துக்கு கொண்டு வந்து சேர்க்க வேண்டும். பதற்றமான வாக்குச்சாவடிகளில் கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்தவற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று கூறினார். கூட்டத்தில் மண்டல அலுவலர்கள் கலந்து கொண்டனர்.