தஞ்சை மாநகராட்சி சந்திக்கும் முதல் தேர்தல்
தஞ்சை மாநகராட்சி சந்திக்கும் முதல் தேர்தலில் மேயர் பதவியை கைப்பற்ற தி.மு.க., அ.தி.மு.க. இடையே கடும் போட்டி நிலவுகிறது.;
தஞ்சாவூர்;
தஞ்சை மாநகராட்சி சந்திக்கும் முதல் தேர்தலில் மேயர் பதவியை கைப்பற்ற தி.மு.க., அ.தி.மு.க. இடையே கடும் போட்டி நிலவுகிறது.
தஞ்சை நகராட்சி
தமிழகத்தின் நெற்களஞ்சியமான ஒருங்கிணைந்த தஞ்சை மாவட்டத்தின் பழமையான நகரமாக தஞ்சை திகழ்ந்தது. வரலாற்று சிறப்புமிக்க தஞ்சை நகரம் கடந்த 1866-ம் ஆண்டு மே மாதம் 9-ந் தேதி முதல் நகராட்சியாக செயல்பட்டு வந்தது.
அதன்பிறகு படிப்படியாக தரம் உயர்த்தப்பட்டது. 1943-ம் ஆண்டு முதல் நிலை நகராட்சியாகவும், 63-ம் ஆண்டு தேர்வு நிலை நகராட்சியாகவும், 83-ம் சிறப்புநிலை நகராட்சியாகவும் தரம் உயர்த்தப்பட்டது.
மாநகராட்சியாக தரம் உயர்வு
அதன்பிறகு தஞ்சை நகராட்சியை மாநகராட்சியாக தரம் உயர்த்த வேண்டும் என கோரிக்கைகள் பல்வேறு தரப்பில் இருந்து வைக்கப்பட்டது. இதை ஏற்று தஞ்சை நகராட்சி கடந்த 2014-ம் ஆண்டு பிப்ரவரி 19-ந் தேதி மாநகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டது.
என்றாலும், நகராட்சியாக இருந்த காலத்தில் உள்ள 51 வார்டுகளே, மாநகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டும் நீடிக்கிறது. தஞ்சை மாநகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டவுடன் அப்போது நகராட்சி தலைவியாக இருந்த சாவித்திரி கோபால் மாநகராட்சியின் முதல் மேயராக பொறுப்பேற்றுக்கொண்டார்.
முதல் முறையாக நேரடி தேர்தல்
அதாவது தனியாக தேர்தல் நடத்தப்படாமல் நகராட்சி தலைவியாக இருந்தவர் மேயராகவும், துணைத் தலைவர் துணை மேயராகவும், நகராட்சி உறுப்பினர்கள் மாநகராட்சி உறுப்பினர்களாகவும் பொறுப்பு வகித்து வந்தனர்.
தஞ்சை மாநகராட்சியாக தரம் உயர்த்தப்பட்ட பிறகு முதல் முறையாக நேரடி தேர்தலை சந்திக்க இருக்கிறது. இதற்கு ஆயத்தமாக தஞ்சை மாநகராட்சியை விரிவாக்கம் செய்யப்படுவதாக சட்டசபை கூட்டத்தில் கடந்த ஆண்டு ஆகஸ்டு் 24-ந் தேதி அறிவிக்கப்பட்டது.
போராட்டம்
இதற்காக வல்லம் பேரூராட்சியையும், சுற்றியுள்ள 13 ஊராட்சிகளை முழுமையாகவும், 2 ஊராட்சிகளை பகுதியாகவும் இணைத்து வார்டுகளின் எண்ணிக்கையை 69 ஆக உயர்த்த திட்டமிடப்பட்டது. ஆனால், தஞ்சை மாநகராட்சியுடன் இணைக்க வல்லம் பேரூராட்சி, சில ஊராட்சிகளை சேர்ந்த மக்கள் எதிர்ப்பு தெரிவித்து பல்வேறு போராட்டங்களை நடத்தினர்.
எனவே, விரிவாக்கத் திட்டம் நிலுவையில் இருந்து வருகிறது. தற்போது, நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், ஏற்கெனவே உள்ள 51 வார்டுகளுக்கு மட்டுமே தஞ்சை மாநகராட்சி தேர்தல் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மொத்தமுள்ள 51 வார்டுகளில் பெண்களுக்கு 26 வார்டுகளிலும், ஆண்களுக்கு 25 வார்டுகளிலும் போட்டியிட வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
தி.மு.க.கூட்டணி
தி.மு.க., சட்டசபை தேர்தலில் இணைந்த தனது கூட்டணி கட்சிகளுடன் மாநகராட்சி தேர்தலை சந்திக்கிறது.கூட்டணி கட்சிகளான காங்கிரஸ் கட்சிக்கு 4 இடங்களும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சிக்கு 2 இடங்களும், இந்திய கம்யூனிஸ்டு கட்சி, ம.தி.மு.க., விடுதலை சிறுத்தைகள், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் ஆகிய கட்சிகளுக்கு தலா ஒரு இடமும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்கிய வார்டுகள் போக மீதம் உள்ள 41 இடங்களில் தி.மு.க. போட்டியிடுகிறது. கூட்டணி கட்சிகளான ம.தி.மு.க., விடுதலை சிறுத்தைகள் ஆகியவை உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடுகின்றன.
அ.தி.மு.க. கூட்டணி
அ.தி.மு.க. கூட்டணியில் த.மா.கா. மட்டுமே இடம் பிடித்துள்ளது. பா.ஜ.க. தனித்து போட்டியிடுகிறது. அ.தி.மு.க. கூட்டணியில் த.மா.கா. ஒரு இடத்திலும், மீதம் உள்ள 50 இடங்களில் அ.தி.மு.க.வும் போட்டியிடுகின்றன.
கடும் போட்டி
வேட்புமனு தாக்கல் நேற்றுடன் முடிவடைந்தது. தி.மு.க., அ.தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சியினர் வேட்புமனு தாக்கல் செய்து விட்டு தேர்தல் பணிகளில் மும்முரமாக ஈடுபட தொடங்கியுள்ளனர்.
அதேபோல் நாம் தமிழர் கட்சி, எஸ்.டி.பி.ஐ. கட்சி போன்ற கட்சிகளும் களத்தில் உள்ளன. இருந்தாலும் தி.மு.க அ.தி.மு.க.விற்கு இடையேதான் கடும் போட்டி நிலவுகிறது.
களப்பணி
தஞ்சை மாநகராட்சியாக தரம் உயர்த்தப்பட்ட பிறகு நடைபெறும் முதல் தேர்தல் ஆகும். இதனால் இந்த தேர்தலில் வெற்றி பெற்று மாநகராட்சி மேயர் பதவியை கைப்பற்றி தலைமையிடம் நல்ல பெயர்வாங்க வேண்டும் என்ற நோக்கத்தில் தி.மு.க.வினர் களப்பணி ஆற்றி வருகின்றனர்.
ஏற்கனவே நகராட்சி தலைவியாக இருந்த அ.தி.மு.க.வை சேர்ந்த சாவித்திரி கோபால், தேர்தல் நடத்தப்படாமல் மேயராக தேர்வு செய்யப்பட்டார். தற்போது நேரடி தேர்தல் மூலம் மீண்டும் மேயர் பதவியை தக்க வைக்க வேண்டும் என்ற எண்ணத்தில் அ.தி.மு.கவினர் களப்பணி ஆற்றி வருகின்றனர்.
களைகட்டியுள்ளது
தி.மு.க.வும், அ.தி.மு.கவும் போட்டி போட்டு தேர்தல் பணியில் ஈடுபட்டு வருவதால் தஞ்சை மாநகரில் உள்ளாட்சி தேர்தல் களம் களைகட்டியுள்ளது.
தஞ்சை மாநகராட்சியை யார் கைப்பற்ற போகிறார்கள் என்பதற்கு இன்னும் சில நாட்களில் விடை கிடைத்து விடும் என்பதால் அந்த நாளை தஞ்சை மாநகர மக்கள் மிகுந்த ஆவலுடன் எதிர்பார்த்து உள்ளனர்.