கர்நாடகத்தில் தியேட்டர்களில் 100 சதவீத பார்வையாளர்களுக்கு அனுமதி
கர்நாடகத்தில் கொரோனா விதிகளில் கூடுதல் தளர்வுகள் வழங்கியும், தியேட்டர்களில் 100 சதவீத பார்வையாளர்களுக்கு அனுமதி அளித்தும் கர்நாடக அரசு அறிவித்துள்ளது. மேலும் இதுதொடர்பாக வழிகாட்டுதல் வெளியிடப்படும் என்றும் அரசு தெரிவித்துள்ளது.
பெங்களூரு:
தியேட்டர்கள் மூடப்பட்டன
கர்நாடகத்தில் கொரோனா தடுப்பு விதிகள் அதாவது ஊரடங்கு கட்டுப்பாடுகளை தளர்த்துவது தொடர்பாக முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை தலைமையில் ஆலோசனை கூட்டம் பெங்களூருவில் நேற்று நடைபெற்றது. இதில் சுகாதாரத்துறை மந்திரி சுதாகர் உள்பட உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.இந்த கூட்டத்தில் கர்நாடகத்தில் தியேட்டர்களில் 100 சதவீத இருக்கைகளை பயன்படுத்த அனுமதி அளிப்பது என்று தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து மந்திாி சுதாகர் நிருபர்களிடம் கூறியதாவது:-
கர்நாடகத்தில் கொரோனா 3-வது அலை தொடங்கியதை அடுத்து கடந்த 2021-ம் ஆண்டு டிசம்பர் மாத இறுதியில் ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டன. இதனால் தியேட்டர்கள், ஓட்டல்கள், வணிக வளாகங்கள் மூடப்பட்டன. இந்த நிலையில் கடந்த ஜனவரி மாதம் 15-ந் தேதி முதல் ஊரடங்கு கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டு வருகின்றன. ஆனால் தியேட்டர்கள், உடற்பயிற்சி கூடங்கள், யோகா மையங்கள், நீச்சல் குளங்கள் உள்ளிட்ட இடங்களில் 50 சதவீத பேரை மட்டும் அனுமதிக்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டது.
ஊரடங்கு கட்டுப்பாடுகள்
கடந்த ஜனவரி மாதம் கொரோனா பாதித்தவர்களில் சுமார் 5 சதவீதம் பேர் மட்டுமே ஆஸ்பத்திரியில் சேர்ந்து சிகிச்சை பெற்றனர். அது தற்போது 2 சதவீதமாக குறைந்துள்ளது. இதை அரசு கவனித்து, ஊரடங்கு கட்டுப்பாடுகளை அரசு மேலும் தளர்த்த முடிவு செய்துள்ளது. அதன்படி தியேட்டர்களில் 100 சதவீதம் பேர் இருக்கையில் அமர்ந்து படம் பார்க்கலாம்.
அதே போல் யோகா மையம், உடற்பயிற்சி கூடம், நீச்சல் குளத்திலும் 100 சதவீதம் பேர் தங்களின் பணிகளை மேற்கொள்ளலாம். ஆனால் அங்கு கொரோனா தடுப்பு விதிமுறைகளை தவறாமல் பின்பற்ற வேண்டும். அதாவது முகக்கவசம் அணிய வேண்டும், சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும், சானிடைசர் பயன்படுத்த வேண்டும். இந்த விதிமுறைகள் பின்பற்றப்படுகிறதா? என்பது குறித்து அதிகாரிகள் ஆய்வு நடத்துவார்கள். விதிமுறைகள் மீறப்பட்டால் அத்தகைய தியேட்டர் உள்ளிட்ட நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.
2 டோஸ் தடுப்பூசி
மேலும் அங்கு 2 டோஸ் தடுப்பூசி போட்டிருப்பது கட்டாயமாக்கப்பட்டு உள்ளது. அத்தகையவர்களை மட்டுமே அனுமதிக்க வேண்டும். இதுகுறித்து வழிகாட்டுதலை அரசு வெளியிடும். கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டாலும் பொதுமக்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். யாருக்கும் பொருளாதார இழப்பு ஏற்படக்கூடாது என்று கருதி இந்த கட்டுப்பாடுகளை அரசு தளர்த்தியுள்ளது.
இவ்வாறு சுதாகர் கூறினார்.