நதிகள் இணைப்புக்கு ஆர்வம் காட்டும் நிலையில் மேகதாது திட்டத்திற்கு நிர்மலா சீதாராமன் ஒப்புதல் வழங்க வேண்டும் - சித்தராமையா வலியுறுத்தல்
நதிகள் இணைப்புக்கு ஆர்வம் காட்டும் மத்திய மந்திரி நிர்மலா சீதாராமன் மேகதாது திட்டத்திற்கு ஒப்புதல் வழங்க வேண்டும் என்று சித்தராமையா வலியுறுத்தி உள்ளார்.
பெங்களூரு:
கர்நாடக சட்டசபை எதிர்க்கட்சி தலைவர் சித்தராமையா பெங்களூருவில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-
தமிழகத்திற்கு அதிக நீர்
மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் பட்ஜெட்டில் நதிகள் இணைப்பு திட்டத்திற்கு ரூ.46 ஆயிரம் கோடி ஒதுக்கி இருப்பதாக கூறியுள்ளார். அவர் தமிழகத்தை சேர்ந்தவர். அதனால் இந்த நதிகள் இணைப்பு திட்டத்தை அறிவித்து இருக்கலாம். இதுகுறித்து நமது மாநிலத்துடன் ஆலோசித்ததாக தெரியவில்லை. கிருஷ்ணா, கோதாவரி, பெண்ணாறு நதிகளை இணைப்பதன் மூலம் 347 டி.எம்.சி.(ஒரு டி.எம்.சி. என்பது 100 கோடி கனஅடி) நீர் கிடைக்கும் என்று மத்திய அரசு சொல்கிறது.
ராஜஸ்தானுக்கு அடுத்தபடியாக கர்நாடகத்தில் தான் அதிக தரிசு நிலம் உள்ளது. கர்நாடகத்தில் 70 சதவீத நிலத்தில் மழையை நம்பி விவசாயம் செய்யப்படுகிறது. நதிகள் இணைப்பால் தமிழகத்திற்கு அதிக நீர் கிடைக்கும். மாநிலங்களுடன் ஆலோசிக்காமல் இந்த திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளதால், மாநிலங்களுக்கு இடையே நீர் பிரச்சினை ஏற்படும்.
அனைத்துக்கட்சி கூட்டம்
இதுகுறித்து விவாதிக்க முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை உடனே கர்நாடக அனைத்துக்கட்சிகள் கூட்டத்தை கூட்ட வேண்டும். நதிகள் இணைப்பால் எந்தெந்த மாநிலங்களுக்கு எவ்வளவு நீர் கிடைக்கும் என்பது குறித்து கூற வேண்டும். தன்னிச்சையாக முடிவு எடுத்து அதை மாநிலங்கள் மீது திணிப்பது சர்வாதிகார போக்கு. மொரார்ஜி தேசாய் பிரதமராக இருந்தபோது, கங்கை-காவிரி நதிகளை இணைப்பதாக கூறினார்.
வாஜ்பாய் பிரதமராக இருந்தபோதும் இதுகுறித்து அறிவிக்கப்பட்டது. ஆனால் அந்த திட்டத்தை செயல்படுத்தவில்லை. மீண்டும் அதே பொய்யை சொல்ல பா.ஜனதா அரசு தொடங்கியுள்ளது. நதிகள் இணைப்பு திட்டத்தில் கர்நாடக அரசு தனது நிலைப்பாட்டை தெளிவுப்படுத்த வேண்டும். கூட்டாட்சி தத்துவத்தில் உள்ள நாம், மத்திய அரசின் அடிமைகள் அல்ல.
மேகதாது திட்டம்
நிலம், நீர், மொழியை காப்பதில் காங்கிரஸ் அரசியல் செய்யாது. நீர் பிரச்சினை ஏற்பட்டால், மாநிலங்கள் இடையே பகை உணர்வு உண்டாகும். நதிகள் இணைப்புக்கு ஆர்வம் காட்டும் நிா்மலா சீதாராமன், மேகதாது திட்டத்திற்கு ஒப்புதல் வழங்குவதிலும் ஆர்வம் காட்ட வேண்டும். மத்திய அரசு கர்நாடகத்தை மாற்றாந்தாய் மனப்பான்மையுடன் நடத்துகிறது. இதை தான் நான் எதிர்க்கிறேன்.
இவ்வாறு சித்தராமையா கூறினார்.