ரூ.4¼ லட்சம் பறிமுதல்

மாவட்டத்தில் 3 இடங்களில் நடைபெற்ற வாகன சோதனையில் ரூ.4¼ லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது.

Update: 2022-02-04 20:29 GMT
அருப்புக்கோட்டை, 
மாவட்டத்தில் 3 இடங்களில் நடைபெற்ற வாகன சோதனையில் ரூ.4¼ லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது. 
அருப்புக்ேகாட்டை 
அருப்புக்கோட்டை கணேஷ்நகர் பகுதியில் பறக்கும் படை அதிகாரிகள் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர். பறக்கும் படை அதிகாரி திருக்கண்ண முனியாண்டி தலைமையில் காரியாபட்டி சப்- இன்ஸ்பெக்டர் கலைச்செல்வன், போலீசார் அருள்சேவியர்ராஜ் மற்றும் பாண்டீஸ்வரி ஆகியோர் கொண்ட பறக்கும்படை அதிகாரிகள் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த சரக்கு வாகனத்தை நிறுத்தி சோதனை செய்தனர். அதில் முறையான ஆவணங்கள் இன்றி ரூ.2 லட்சத்து 10ஆயிரத்து 110 இருந்தது. விசாரணையில் காரியாபட்டியை சேர்ந்த தனியார் நிறுவன ஊழியர்கள் விஜயகுமார் (வயது 37), டிரைவர் ராஜாராம் (22) ஆகியோர் திருச்சுழியில் நிறுவனத்தின் பணத்தை வசூல் செய்துவிட்டு அருப்புக்கோட்டை வழியாக மீண்டும் காரியாபட்டி நோக்கி சென்று கொண்டிருந்தது தெரியவந்தது. எனினும் முறையான ஆவணங்கள் இல்லாததால் அந்த பணத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்து நகராட்சி அலுவலகத்தில் தேர்தல் அதிகாரியிடம் ஒப்படைத்தனர்.
சிவகாசி 
தேர்தல் பறக்கும் படை தாசில்தார் வெங்கடேசன் தலைமையிலான பறக்கும் படையினர் சிவகாசி-விருதுநகர் ரோட்டில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். 
அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்தவரை தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர். அந்த நபர் அதே பகுதியை சேர்ந்த நாகராஜ் என்பதும், அவரிடம் ரூ.64 ஆயிரத்து 500 இருந்ததும் தெரியவந்தது.  பணத்துக்கான உரிய ஆவணங்கள் ஏதும் நாகராஜிடம் இல்லை. இதைத்தொடர்ந்து பணத்தை பறிமுதல் செய்த தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள், சிவகாசி மாநகராட்சி கமிஷனர் கிருஷ்ணமூர்த்தியிடம் ஒப்படைத்தனர்.
ஸ்ரீவில்லிபுத்தூர் 
 ஸ்ரீவில்லிபுத்தூர் ராமகிருஷ்ணாபுரம் பகுதியில் பறக்கும் படை அதிகாரி ராமர் மற்றும் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் பரமசிவம் ஆகியோர் வாகன சோதனையில் ஈடுபட்டனர். 
அப்போது அந்த வழியாக வந்த மினி லாரியை சோதனை செய்ததில் டிரைவர் செந்தில் முருகன் என்பதும், உரிய ஆவணங்கள் இன்றி ரூ.1 லட்சத்து 56 ஆயிரம் இருந்ததும் தெரியவந்தது. இதையடுத்து அந்த பணத்தை பறிமுதல் செய்த அதிகாரிகள் அவற்றை நகராட்சி தேர்தல் அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர்.

மேலும் செய்திகள்