கொங்கணாபுரம் அருகே எலக்ட்ரிக்கல் கடையில் பயங்கர தீ விபத்து பொருட்கள் எரிந்து சேதம்
கொங்கணாபுரம் அருகே எலக்ட்ரிக்கல் கடையில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இதில் ஏராளமான பொருட்கள் எரிந்து சேதமாயின.
எடப்பாடி,
எலக்ட்ரிக்கல் கடை
சேலம் மாவட்டம் கொங்கணாபுரம் அருகே எட்டிகுட்டைமேடு பகுதியை சேர்ந்தவர் சபரிநாதன் (வயது 26). இவர், அதே பகுதியில் எலக்ட்ரிக்கல் கடை நடத்தி வருகிறார். நேற்று முன்தினம் வழக்கம் போல் கடையை பூட்டி விட்டு வீட்டிற்கு சென்றார். நேற்று அதிகாலை கடையில் இருந்து புகைமூட்டம் வெளியேறியது. இதைப்பார்த்த அக்கம் பக்கத்தினர் சபரிநாதனுக்கு தகவல் தெரிவித்தனர். அவர், பதறி அடித்துக்கொண்டு ஓடி வந்தார். அக்கம் பக்கத்தினர் உதவியுடன் கடையில் பற்றி எரிந்த தீயை அணைக்க முயன்றார். அப்படி இருந்தும் தீ கட்டுக்குள் வராமல் வேகமாக எரிந்தது.
போராடி அணைத்தனர்
உடனே எடப்பாடி தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தீயணைப்பு நிலைய அலுவலர் ராமன் தலைமையில் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு வந்து தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை அணைத்தனர். சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக போராடி தீ அணைக்கப்பட்டது.
எலக்ட்ரிக்கல் கடை என்பதால் மின்சாதன பொருட்கள், வயர்கள், பிளாஸ்டிக் பைப்புகள் உள்ளிட்ட ரூ.20 லட்சம் மதிப்பிலான பொருட்கள் தீயில் எரிந்து சேதமானது. இதுகுறித்து கொங்கணாபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து, தீ விபத்து எப்படி ஏற்பட்டது என்பது குறித்து விசாரணை நடத்தினர்.