காதலித்த ஆசிரியை ஐ.ஜி.யிடம் புகார் செய்ததால் திருச்சி போலீஸ்காரர் தற்கொலை

காதலித்த ஆசிரியை ஐ.ஜி.யிடம் புகார் செய்ததால் திருச்சி போலீஸ்காரர் தற்கொலை செய்து கொண்டார்.

Update: 2022-02-04 19:54 GMT
பெரம்பலூர்:

காதலுக்கு எதிர்ப்பு
திருச்சி மாவட்டம், லால்குடி தாலுகா, புது உத்தமனூர் மேற்கு தெருவை சேர்ந்தவர் ராஜேந்திரன். இவரது மகன் சுரேஷ் (வயது 31). இவர் கடந்த 2013-ம் ஆண்டு போலீஸ் பணிக்கு சேர்ந்து, தற்போது லால்குடி போலீஸ் நிலையத்தில் தனிப்பிரிவு போலீஸ்காரராக பணிபுரிந்து வந்தார்.
இந்த நிலையில் சுரேசும், புள்ளம்பாடி அரசு பள்ளி ஆசிரியை ஒருவரும் உயிருக்கு உயிராக காதலித்து வந்தனர். ஆனால் இருவரும் வெவ்வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள் என்பதால், இவர்களது காதலுக்கு சுரேசின் பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்தனர்.
வேறொரு பெண்ணுடன் திருமண ஏற்பாடு
இந்த நிலையில் சுரேசுக்கு வேறொரு பெண்ணுடன் வருகிற 7-ந்தேதி திருமணம் செய்து வைக்க ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து கொண்டிருந்ததாக கூறப்படுகிறது. இதனை கேள்விப்பட்டு அதிர்ச்சியடைந்த அந்த பள்ளி ஆசிரியை இதுகுறித்து நடவடிக்கை எடுக்குமாறு திருச்சி மத்திய மண்டல போலீஸ் ஐ.ஜி. பாலகிருஷ்ணனை கடந்த 31-ந்தேதி சந்தித்து புகார் மனு கொடுத்ததாக கூறப்படுகிறது.
இதனை அறிந்த சுரேஷ் கடந்த 1-ந்தேதி முதல் பணிக்கு செல்லவில்லை. அன்றைய தினம் பெரம்பலூரில் உள்ள தனியார் தங்கும் விடுதியில் அறை எடுத்து தங்கியுள்ளார்.
தற்கொலை
இந்நிலையில் நேற்று முன்தினம் மாலை சுரேஷ் தனது நண்பர் ஒருவரை செல்போனில் தொடர்பு கொண்டு தான் எலி பேஸ்டை (விஷம்) தின்றதாக கூறியுள்ளார். இதையடுத்து அவரது நண்பர் பெரம்பலூரில் சுரேஷ் தங்கியிருந்த விடுதிக்கு விரைந்து வந்தார்.  அப்போது அங்கு உயிருக்கு போராடிக்கொண்டிருந்த சுரேசை உடனடியாக மீட்டு சிகிச்சைக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தார். பின்னர் மேல்சிகிச்சைக்காக திருச்சியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த சுரேஷ், அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று அதிகாலை உயிரிழந்தார். இதுகுறித்து பெரம்பலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
தாய் புகார்
இந்நிலையில் சுரேசின் தாய் பிரபாவதி பெரம்பலூர் போலீஸ் நிலையத்தில் நேற்று ஒரு புகார் கொடுத்தார். அதில், கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு சுரேசை புள்ளம்பாடியை சேர்ந்த ஒரு பெண் காதலித்து வந்துள்ளார். அவர்களுக்கு இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்து விட்டனர். இதையடுத்து தான் சுரேசுக்கு வேறொரு பெண்ணுடன் வருகிற 7-ந்தேதி திருமணம் செய்து வைக்க ஏற்பாடு செய்தோம். இந்த நிலையில் சுரேசை காதலித்த பெண், தற்போது சுரேஷ் திருமணத்திற்கு பார்த்து வைத்திருந்த பெண் வீட்டிற்கு சென்று நான் சுரேசை காதலிக்கிறேன். நீ எப்படி சுரேசை திருமணம் செய்து கொள்வாய்? என்று கேட்டு, தகாத வார்த்தையால் திட்டி, அசிங்கப்படுத்தி வந்ததாக திருமணத்திற்கு பார்த்து வைத்திருந்த பெண் குடும்பத்தினர் தெரிவித்தனர்.
6 பேர் மீது வழக்கு
காதலித்த பெண், திருமணம் செய்து கொள்ள இருந்த பெண் வீட்டிற்கு சென்று அசிங்கப்படுத்தி வந்ததால் சுரேஷ் மனமுடைந்து பெரம்பலூரில் தனியார் தங்கும் விடுதியில் விஷம் தின்றார். பின்னர் மேல் சிகிச்சைக்காக திருச்சி தனியார் மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்தபோது சுரேசிடம் விசாரித்ததில், ரூ.10 லட்சம் கொடுத்தால் வேறொரு பெண்ணை திருமணம் செய்ய விடுவதாகவும், இல்லையென்றால் சுரேஷ் மீது போலீசாரிடம் புகார் கொடுப்பதாகவும் காதலித்த பெண், மேலும் அவருடைய குடும்பத்தை சேர்ந்த 3 பேர் மற்றும் வக்கீல், ஒரு அரசியல் கட்சியை சேர்ந்த ஒருவர் ஆகியோர் மிரட்டியுள்ளனர்.
அவர்கள் பணம் கேட்டு மிரட்டியதால்தான் சுரேஷ் தற்கொலை செய்து கொண்டார். எனவே அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியிருந்தார். அதன்பேரில் சுரேசை தற்கொலைக்கு துண்டியதாக, அவரது காதலி உள்பட 6 பேர் மீது பெரம்பலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்