ஊராட்சி தலைவர்கள் சாலை மறியல்

ஊராட்சி தலைவர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.;

Update: 2022-02-04 19:54 GMT
செந்துறை:
அரியலூர் மாவட்டம் செந்துறை ஒன்றியத்தில் 30 ஊராட்சிகள் உள்ளன. இந்தநிலையில் ஊராட்சிக்கு வரும் நிதிகளை ஆளும் கட்சியினருக்கு ஒதுக்க வேண்டும் என்று தி.மு.க.வினர் நிர்ப்பந்தம் செய்ததாக கூறப்படுகிறது. இது குறித்து ஏற்கனவே புகார் செய்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த ஊராட்சி மன்ற தலைவர்கள்‌ செந்துறை ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு உச்சி வெயிலில் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அரியலூர்- ஜெயங்கொண்டம் சாலையில் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து செந்துறை போலீசார் 22 ஊராட்சி மன்ற தலைவர்கள் உள்ளிட்ட 30 பேரை கைது செய்து போலீஸ் நிலையம் அழைத்து வந்தனர். இது குறித்து தகவல் அறிந்த முன்னாள் எம்.எல்.ஏ. ஆர்.டி.ராமச்சந்திரன் மற்றும் அ.தி.மு.க. நிர்வாகிகள் செந்துறை போலீஸ் நிலையம் முன்பு ஊராட்சி மன்றத்தலைவர்களை விடுதலை செய்யக்கோரி சாலை மறியலில் ஈடுபட்டனர். பின்னர் போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து, கைது செய்யப்பட்ட ஊராட்சி மன்ற தலைவர்கள் உள்ளிட்டோரை மாலை 6 மணிக்கு போலீசார் விடுதலை செய்தனர். இந்த சம்பவம் காரணமாக அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. 

மேலும் செய்திகள்