தினத்தந்தி புகார் பெட்டி

‘தினத்தந்தி’ புகார் பெட்டிக்கு 8939278888 என்ற ‘வாட்ஸ்-அப்’ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-

Update: 2022-02-04 19:45 GMT
சாலைகள் சீரமைக்கப்படுமா?
கிருஷ்ணகிரியில் பெங்களூரு- கிருஷ்ணகிரி தேசிய நெடுஞ்சாலை அருகில் காட்டு வீர ஆஞ்சநேயர் கோவில் உள்ளது. இந்த கோவிலுக்கு தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கிறார்கள். தேசிய நெடுஞ்சாலையில் இருந்து அரை கிலோ மீட்டர் தொலைவில் உள்ள இந்த கோவிலுக்கு கர்நாடகா, ஆந்திரா உள்பட பல்வேறு மாநிலங்களை சேர்ந்த பக்தர்கள் வந்து செல்கின்றனர். இந்த கோவிலுக்கு செல்லக்கூடிய சாலை மிகவும் மோசமாக உள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் கடும் அவதிக்குள்ளாகி வருகிறார்கள். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இந்த சாலையை சீரமைக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-தர்ஷன், கிருஷ்ணகிரி.

தர்மபுரி மாவட்டத்தில் உள்ள முக்கிய வழிபாட்டு தலங்களில் ஒன்றாக வே.முத்தம்பட்டி ஆஞ்சநேயர் கோவில் உள்ளது. வனப்பகுதியில் அமைந்துள்ள இந்த கோவிலுக்கு தர்மபுரி மாவட்டத்தில் இருந்து மட்டுமின்றி சேலம், கிருஷ்ணகிரி மற்றும் கர்நாடக மாநிலத்தில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்வது வழக்கம். இந்த கோவிலுக்கு செல்வதற்கான வனப்பகுதி தார்சாலை பல இடங்களில் சேதமடைந்து குண்டும், குழியுமாக காட்சி அளிக்கிறது. இதனால் இந்த வழியாக கார், வேன் மற்றும் இரு சக்கர வாகனங்களில் சென்று வருபவர்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகி உள்ளனர்.. எனவே இந்த தார் சாலையை சீரமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-மாணிக்கம், தர்மபுரி.

ஜல்லிகற்கள் பெயர்ந்த சாலை
சேலம் அங்கம்மாள் காலனி பார்வதிபுரம் பகுதியில் சாலை போடுவதற்காக பொக்லைன் எந்திரம் மூலம் பழயை சாலையை பெயர்த்து போட்டுள்ளனர். பல மாதங்களாக ஜல்லிகற்கள் பெயர்ந்து காணப்படும் இந்த சாலையில் செல்ல வாகன ஓட்டிகள், பொதுமக்கள் கடும் சிரமப்பட்டுள்ளனர். எனவே பொதுமக்களின் நலன் கருதி அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து சாலையை புதுப்பிக்க வேண்டும்.
-சின்னதம்பி, பார்வதிபுரம், சேலம்.

பயன்படாத குடிநீர் தொட்டிகள்
நாமக்கல் மாவட்டம் நடுப்பட்டி ஊராட்சி அறமத்தாபாளையம் கிராமத்தில் கடந்த 2016- 17-ம் ஆண்டில் ஆழ்துளை கிணறு அமைத்து மின் மோட்டார் மூலம் 2 குடிநீர் தொட்டிகள் அமைக்கப்பட்டன. இந்த குடிநீர் தொட்டிகள் பல ஆண்டுகளாக அந்த பகுதி மக்களின் குடிநீர் பிரச்சினையை தீர்த்தன. தற்போது அந்த  தொட்டிகள் பயன்படாமல் இருப்பது கவலையாக இருக்கிறது. இதுபற்றி சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் தெரிவித்தும் கண்டுகொள்ளவில்லை. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து மின்மோட்டார் மற்றும் ஆழ்துளை கிணற்றை சீரமைத்து 2 குடிநீர்தொட்டிகளையும் பொதுமக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும்.
-ஊர்பொதுமக்கள், அறமத்தாபாளையம், நாமக்கல்.

பூட்டியே கிடக்கும் சுகாதார வளாகம்
சேலம் மாவட்டம் கொங்கணாபுரம் ஒன்றியம் பாலப்பட்டி கிராமத்தில் அரசு துணை சுகாதார நிலையம் உள்ளது. இங்குள்ள கட்டிடம் சேதமடைந்து எப்போது வேண்டுமானாலும் இடிந்து விழும் நிலையில் உள்ளது. இதனால் திறந்தவெளியில் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருவது கவலையாக இருக்கிறது. எனவே பொதுமக்களின் நலன் கருதி அதிகாரிகள் விரைவில் நடவடிக்கை எடுத்து சுகாதார வளாக கட்டிடத்தை சீரமைத்து பொதுமக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும்.
-சுரேஷ்குமார், பாலப்பட்டி, சேலம்.

சாலையில் ஓடும் குடிநீர்
சேலம் மாவட்டம் கொங்கணாபுரம் பேரூராட்சி சின்ன மாரியம்மன் கோவில் அருகில் பூலாம்பட்டி- ராசிபுரம் சாலை அருகே குடிநீர் குழாய் உடைந்து குடிநீர் சாலையில் ஆறாக ஓடுகிறது. இதனால் சாலையோரமாக தண்ணீர் நிற்பதால் மக்கள் மிகவும் சிரமப்படுகிறார்கள். இப்படி அடிக்கடி குடிநீர் குழாய் உடைவதால் இதுபற்றி அதிகாரிகளிடம் புகார் அளித்தும் எந்தவித நடவடிக்கையும் இல்லை. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து குடிநீர் குழாய் மீண்டும் உடையாமல் சரி செய்ய வேண்டும்.
-பொன்.மா.அறிவரசன், கொங்கணாபுரம், சேலம்.

மேலும் செய்திகள்