குடியரசு தின அலங்கார ஊர்தியை பார்த்து ரசித்த பொதுமக்கள்

நெல்லையில் 2-வது நாளாக குடியரசு தின அலங்கார ஊர்தியை பொதுமக்கள் பார்த்து ரசித்தனர்.

Update: 2022-02-04 19:44 GMT
நெல்லை:
நெல்லையில் 2-வது நாளாக குடியரசு தின அலங்கார ஊர்தியை பொதுமக்கள் பார்த்து ரசித்தனர். 

அலங்கார ஊர்தி

ஆங்கிலேயர்களை எதிர்த்து போராடிய தமிழக வீரர்களான மருது சகோதரர்கள், வீரபாண்டிய கட்டபொம்மன், வேலுநாச்சியார், ஒண்டிவீரன், பூலித்தேவன், அழகுமுத்துக்கோன் ஆகியோரின் உருவச்சிலைகள் இடம்பெற்ற அலங்கார ஊர்தி சென்னை குடியரசு தின விழாவில் இடம்பெற்றது. 

அந்த அலங்கார ஊர்தி தமிழகம் முழுவதும் பொதுமக்கள் பார்வைக்கு அனுப்பி வைக்கப்படும் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார். அதன்படி பல்வேறு நகரங்களுக்கு சென்ற அலங்கார ஊர்தி நேற்று முன்தினம் நெல்லைக்கு வந்தது. அதனை நெல்லை மாவட்ட எல்லையான உத்தம்பாண்டியன்குளம் பகுதியில் சபாநாயகர் அப்பாவு, அமைச்சர் ராஜகண்ணப்பன், கலெக்டர் விஷ்ணு உள்ளிட்டோர் மலர் தூவி வரவேற்றனர். தொடர்ந்து நெல்லை புதிய பஸ் நிலையம் அருகே நிறுத்தி வைக்கப்பட்டிருந்த அங்கார ஊர்தியை ஏராளமான பொதுமக்கள், பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகள் பார்த்து ரசித்தனர். 

2-வது நாளாக...

நேற்று 2-வது நாளாக காலை முதல் மதியம் வரை அலங்கார ஊர்தி அங்கு நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தது. நேற்றும் ஏராளமான பொதுமக்கள், பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகள் பார்த்து ரசித்தனர். மேலும் சிலர் அதன் அருகில் நின்று செல்பி மற்றும் புகைப்படம் எடுத்துக் கொண்டனர். மாணவர்கள் அலங்கார ஊர்தி குறித்தும், சுதந்திர போராட்ட வீரர்கள் குறித்தும் குறிப்புகள் எடுத்ததை பார்க்க முடிந்தது. 

இதேபோல் வள்ளியூருக்கு வந்த குடியரசு தின அலங்கார ஊர்தியை சபாநாயகர் அப்பாவு மலர் தூவி வரவேற்றார். இதில் வள்ளியூர் யூனியன் தலைவர் சேவியர் செல்வராஜா, ராதாபுரம் தாசில்தார் யேசு ராஜன் உள்பட பலர் கலந்து கொண்டனர். பள்ளி மாணவ-மாணவிகள் ஊர்தியை பார்வையிட்டு செல்பி எடுத்துக் கொண்டனர்.

நெல்லை மாவட்டத்தில் குடியரசு தின அலங்கார ஊர்தி சென்ற இடங்களில் மின்சார பாதையில் பிரச்சினை ஏற்படாத வகையில் நெல்லை மின்சார வாரிய மேற்பார்வை பொறியாளர் ராஜராஜன் நேரடி மேற்பார்வையில், செயற்பொறியாளர்கள், உதவி பொறியாளர்கள் மற்றும் ஊழியர்கள் மின்சார ஒயர்களை சரிசெய்து ஊர்தியை அனுப்பி வைத்தனர்

மேலும் செய்திகள்