நெல்லையில் பறக்கும் படையினர் சோதனை தீவிரம்

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலையொட்டி நெல்லையில் பறக்கும் படையினர் தீவிர சோதனையில் ஈடுபட்டனர்.

Update: 2022-02-04 19:28 GMT
நெல்லை:
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலையொட்டி நெல்லையில் பறக்கும் படையினர் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். 

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்

தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வருகிற 19-ந் தேதி நடக்கிறது. இதையொட்டி தேர்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ளது. இந்த விதிமுறைகள் முறையாக கடைபிடிக்கப்படுகிறதா என்பதை கண்காணிக்கவும், பணப்பட்டுவாடா, முறைகேடுகளை தடுக்கும் பொருட்டும் நெல்லை மாவட்டத்தில் 51 பறக்கும் படைகள் அமைக்கப்பட்டு உள்ளன. 

நெல்லை மாநகராட்சியில் தச்சநல்லூர், பாளையங்கோட்டை, மேலப்பாளையம், நெல்லை ஆகிய 4 மண்டலங்களுக்கும், அம்பை, விக்கிரமசிங்கபுரம், களக்காடு ஆகிய 3 நகராட்சிகளுக்கும் தலா 3 பறக்கும் படைகள் அமைக்கப்பட்டு உள்ளன. 

24 மணி நேர கண்காணிப்பு

நாங்குநேரி, முக்கூடல், மூலைக்கரைப்பட்டி, திசையன்விளை ஆகிய பேரூராட்சி பகுதிகளுக்கு தலா 3 பறக்கும் படைகளும், சேரன்மாதேவி, பத்தமடை பேரூராட்சிகளுக்கு 3 பறக்கும் படைகளும், சங்கர்நகர், நாரணம்மாள்புரம் ஆகிய பேரூராட்சிகளுக்கு 3 பறக்கும் படைகளும், திருக்குறுங்குடி, ஏர்வாடி பேரூராட்சிகளுக்கு 3 பறக்கும் படைகளும், பணகுடி, வடக்கு வள்ளியூர் பேரூராட்சிகளுக்கு 3 பறக்கும் படைகளும், வீரவநல்லூர், கல்லிடைக்குறிச்சி, மணிமுத்தாறு ஆகிய பேரூராட்சிகளுக்கு 3 பறக்கும் படைகளும் அமைக்கப்பட்டு இருக்கின்றன. 

ஒவ்வொரு பறக்கும் படையிலும் உதவி இயக்குனர், உதவி பொறியாளர், உதவி ஆணையாளர் மற்றும் தாசில்தார் நிலையிலான அலுவலர்கள் தலைமையில் ஒரு சப்-இன்ஸ்பெக்டர், ஒரு போலீஸ்காரர், ஒரு வீடியோகிராபர், ஒரு டிரைவர் ஆகியோர் உள்ளனர்.  இந்த பறக்கும் படையினர் 24 மணி நேரமும் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

தீவிர சோதனை

நெல்லை மாநகராட்சி பகுதியில் நேற்று வேட்புமனு தாக்கல் செய்ய ஏராளமான வேட்பாளர்கள் மேளதாளம் முழங்க, ஆட்டம் பாட்டத்துடன் வந்தனர். இதனால் தேர்தல் பறக்கும் படையினர் ஆங்காங்கே நின்று தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர். 

மேலப்பாளையம் கருங்குளம், டக்கரம்மாள்புரம், கே.டி.சி.நகர், தச்சநல்லூர், கண்டியபேரி உள்ளிட்ட சோதனை சாவடிகளிலும் மண்டல தேர்தல் பறக்கும் படையினர் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். தச்சநல்லூர் சோதனை சாவடியில் மண்டல பறக்கும் படை அலுவலர் ரேவதி சங்கர் தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர்கள் கிருஷ்ணன், ஜெயராஜ் ஆகியோர் அடங்கிய குழுவினர் வாகன சோதனையில் ஈடுபட்டனர். 

மேலும் செய்திகள்