தொழிலாளியை கழுத்தை நெரித்து கொன்ற மனைவி கைது

அம்பை அருகே தொழிலாளி மர்ம சாவில் திடீர் திருப்பமாக, அவரை மனைவியே கழுத்தை நெரித்து கொலை செய்து விட்டு, மாரடைப்பால் இறந்ததாக நாடகமாடியது அம்பலமானது. அவரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2022-02-04 19:24 GMT
அம்பை:
அம்பை அருகே தொழிலாளி மர்ம சாவில் திடீர் திருப்பமாக, அவரை மனைவியே கழுத்தை நெரித்து கொலை செய்து விட்டு, மாரடைப்பால் இறந்ததாக நாடகமாடியது அம்பலமானது. அவரை போலீசார் கைது செய்தனர்.

தொழிலாளி மர்ம சாவு

நெல்லை மாவட்டம் அம்பை முடப்பாலம் புதுகாலனியைச் சேர்ந்தவர் பன்னீர்செல்வம். இவருடைய மகன் பேச்சிமுத்து (வயது 29), கூலி தொழிலாளி. இவருடைய மனைவி சுதா (26). இவர்களுக்கு 5 வயதில் ஒரு மகனும், 3 வயதில் ஒரு மகளும் உள்ளனர்.

இந்த நிலையில் கடந்த 2-ந்தேதி இரவில் மதுபோதையில் தூங்கிய பேச்சிமுத்துவுக்கு திடீர் மாரடைப்பு ஏற்பட்டதில் இறந்ததாக மனைவி சுதா அக்கம்பக்கத்தினரிடம் கூறி, மறுநாள் அவரது உடலை அடக்க செய்ய ஏற்பாடு செய்தார். பேச்சிமுத்து திடீரென்று மர்மமான முறையில் இறந்ததால், அவரது உடலை அம்பை போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

கழுத்தை நெரித்து கொலை

இதற்கிடையே, சுதாவின் நடவடிக்கையில் சந்தேகம் ஏற்பட்டதால், அவரிடம் போலீசார் கிடுக்குப்பிடி விசாரணை மேற்கொண்டனர். அப்போது அவர், கணவரை சேலையால் கழுத்தை நெரித்து கொலை செய்து விட்டு, மாரடைப்பால் இறந்ததாக நாடகமாடியது அம்பலமானது.

அதாவது, சுதாவுக்கும், மற்றொரு நபருக்கும் இடையே கள்ளத்தொடர்பு இருந்துள்ளது. இதனை அறிந்த பேச்சிமுத்து மனைவியை கண்டித்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த சுதா கடந்த 2-ந்தேதி இரவில் வீட்டில் மதுபோதையில் தூங்கிய பேச்சிமுத்துவை சேலையால் கழுத்தை இறுக்கி கொலை செய்து விட்டு, அவர் மாரடைப்பால் இறந்ததாக அக்கம்பக்கத்தினரிடம் கூறி நாடகமாடியது விசாரணையில் தெரியவந்து உள்ளது.

மனைவி கைது

இதையடுத்து சுதாவை போலீசார் நேற்று கைது செய்தனர். பின்னர் அவரை அம்பை கோர்ட்டில் ஆஜர்படுத்தி, நெல்லை கொக்கிரகுளம் மகளிர் சிறையில் அடைத்தனர்.

தொழிலாளியை அவரது மனைவியே கழுத்தை நெரித்து கொலை செய்து விட்டு, அவர் மாரடைப்பால் இறந்ததாக நாடகமாடிய சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

மேலும் செய்திகள்