பெண் சப்-இன்ஸ்பெக்டருக்கு கொலை மிரட்டல்;3 பேர் கைது

சுசீந்திரம் போலீஸ் நிலையத்தில் பெண் சப்-இன்ஸ்பெக்டருக்கு கொலை மிரட்டல் விடுத்த 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2022-02-04 19:10 GMT
மேலகிருஷ்ணன்புதூர், 
சுசீந்திரம் போலீஸ் நிலையத்தில் பெண் சப்-இன்ஸ்பெக்டருக்கு கொலை மிரட்டல் விடுத்த 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
இந்த சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-
பெண் சப்-இன்ஸ்பெக்டர்
குமரி மாவட்டம் சுசீந்திரம் போலீஸ் நிலையத்தில் பெண் சப்-இன்ஸ்பெக்டராக இருப்பவர் ஆஷாஜெபகர். இவரது தலைமையில் போலீசார் நேற்று முன்தினம் மாலையில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அவர்கள் சுசீந்திரத்தில் இருந்து தேரூர் செல்லும் பைபாஸ் சாலையில் ஆற்றுப்பாலம் அருகில் சென்றனர். அப்போது 3 பேர் மது போதையில் ரகளையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர்.
இதை பார்த்த போலீசார் அவர்களை சுற்றி வளைத்து பிடித்து விசாரணை நடத்தினர். அப்போது அவர்கள் சுசீந்திரம் கொத்தையார்த்திட்ட தெருவை சேர்ந்த வின்ஸ் (வயது26), அக்கரை நல்லூர் மெயின் ரோடு பகுதியை சேர்ந்த பிரியதர்ஷன் (29), நாகர்கோவில் ஒழுகினசேரி ஆராட்டு ரோடு பகுதியை சேர்ந்த சாகுல் ஹமீது (27) என்பது தெரிய வந்தது. 
மேலும், அவர்கள் 3 பேரும் பெண் சப்-இன்ஸ்பெக்டரை தகாத வார்த்தையால் பேசி ரகளையில் ஈடுபட்டனர்.
கொலை மிரட்டல்
இதையடுத்து 3 பேரையும் போலீசார் பிடித்து சுசீந்திரம் போலீஸ் நிலையத்திற்கு கொண்டு வந்தனர். அங்கு சென்றவுடன் 3 பேரும் சேர்ந்து பெண் சப்-இன்ஸ்பெக்டரை தகாத வார்த்தைகள் பேசியதோடு ‘உன்னை கொல்லாமல் விடமாட்டோம்’ என மிரட்டினர். மேலும் பெண் சப்-இன்ஸ்பெக்டரை தாக்க முயன்றதாகவும் கூறப்படுகிறது.
இதுகுறித்து சப்-இன்ஸ்பெக்டர் ஆஷா ஜெபகர் சுசீந்திரம் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். 
கைது
அந்த புகாரின் பேரில் இன்ஸ்பெக்டர் சாயிலெட்சுமி, சப்-இன்ஸ்பெக்டர் கபிரியேல் ஆகியோர் வின்ஸ், பிரியதர்ஷன், சாகுல்ஹமீது ஆகிய 3 பேர் மீது வழக்குப் பதிவு செய்து அவர்களை கைது செய்தனர். பின்னர், அவர்களை நாகர்கோவில் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

மேலும் செய்திகள்