காரைக்குடி சிக்ரி விஞ்ஞானிகள் கண்டுபிடித்த மண் பரிசோதனை கருவி
விவசாயிகள் எளிதாக மண் பரிசோதனை செய்யும் வகையில் காரைக்குடி சிக்ரி விஞ்ஞானிகள் கண்டுபிடித்த மண்பரிசோதனை கருவியை மாவட்ட கலெக்டரிடம் நேரில் வழங்கினர்.
காரைக்குடி,
விவசாயிகள் எளிதாக மண் பரிசோதனை செய்யும் வகையில் காரைக்குடி சிக்ரி விஞ்ஞானிகள் கண்டுபிடித்த மண்பரிசோதனை கருவியை மாவட்ட கலெக்டரிடம் நேரில் வழங்கினர்.
மண் பரிசோதனை கருவி
காரைக்குடி சிக்ரி ஆராய்ச்சி மையத்தில் சிக்ரி விஞ்ஞானிகளால் கண்டுபிடிக்கப்பட்ட மண் பரிசோதனை கருவியை விவசாயிகள் பயன்படுத்துவதற்கு ஏதுவாக வேளாண்மை துறைக்கு ஒப்படைக்கும் நிகழ்ச்சி சிக்ரி ஆராய்ச்சி மைய கூட்டரங்கில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் சிக்ரி ஆராய்ச்சி மைய இயக்குனர் டாக்டர் கலைச்செல்வி மாவட்ட கலெக்டரிடம் மண்பரிசோதனை கருவிகளை வழங்கினார். அதன் பின்னர் மாவட்ட கலெக்டர் மதுசூதன்ரெட்டி வேளாண்மைத்துறை அலுவலர்களிடம் பேசியதாவது:-
விளை நிலத்தில் இருந்து மண்ணை எடுத்து வந்து வேளாண்மைத்துறை அலுவலகத்தில் பரிசோதனை செய்து அதற்குரிய விவரங்களை தெரிய 4 முதல் 5 நாட்கள் வரை ஆகும். இதனால் விவசாயிகளுக்கு காலவிரயம் மற்றும் பொருட் செலவு ஏற்பட்டு வந்தது.
இந்த நிலையில் உள்ளுரிலேயே விவசாயிகள் இருந்த இடத்தில் இருந்து தங்களது விளைநிலத்தில் உள்ள மண்ணின் தன்மையை அறிவதற்கு ஏதுவாக காரைக்குடி சிக்ரி ஆராய்ச்சி நிறுவனத்தைச் சேர்ந்த விஞ்ஞானிகள் மண் பரிசோதனைக்கருவியை வடிவமைத்து உள்ளனர்.
விவசாயிகள் பயனடையலாம்
இந்த கருவியை வேளாண்மை கல்லூரி பேராசிரியர்கள் ஒருங்கிணைப்புடன் மாவட்ட வேளாண்மைத்துறை பயன்படுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்த கருவியை ஒவ்வொரு வட்டார அளவிலும் உதவி வேளாண்துறை அலுவலர்கள் தலைமையில் வேளாண்மைத்துறை விரிவாக்க அலுவலர்கள் கிராமங்களுக்கு நேரடியாக எடுத்துச் சென்று விவசாயிகள் முன்னிலையில் நிலங்களில் மண் பரிசோதனை செய்து மண்ணில் உள்ள சத்துதன்மை அளவை எடுத்து சொல்வதுடன் எந்த வகையான பயிர்களை பயிரிடலாம் எனவும் எடுத்துரைப்பார்கள். இந்த பரிசோதனை என்பது ஒரு விவசாயிக்கு 15நிமிடங்களில் மண் பரிசோதனை செய்து உரிய விவரத்தை தெரிவிக்க முடியும். இதற்காக விவசாயிகள் குறைவான கட்டணம் செலுத்தினால் மட்டும் போதுமானது. மாவட்டத்தில் உள்ள அனைத்து விவசாயிகளும் பயன்பெறும் வகையில் மண் பரிசோதனைகருவி தேவையான அளவு பெற்றுக்கொள்ள ஏதுவாக காரைக்குடி சிக்ரி ஆராய்ச்சி மையம் நடவடிக்கை எடுத்துள்ளது.
இவ்வாறு அவர் பேசினார்.
நிகழ்ச்சியில் சிக்ரி ஆராய்ச்சி மைய முன்னாள் இயக்குனர் டாக்டர் பாலகிருஷ்ணன், வேளாண்மைத்துறை பேராசிரியர்கள் டாக்டர்கள் மதியரசன், கண்ணன் மற்றும் வேளாண்மைத்துறை இணைஇயக்குனர் வெங்கடேஸ்வரன், குன்றக்குடி வேளாண் ஆராய்ச்சி பல்கலைக்கழக முதல்வர் டாக்டர் செந்தூர்குமரன், சிக்ரி ஆராய்ச்சி மைய பொறியாளர்கள் கென்னடி, சுரேஷ் மற்றும் சசிக்குமார் ஆகியோர் கலந்துகொண்டனர்.