750 பவுன் நகைகள் கொள்ளை வழக்கில் 2 பேர் கைது

750 பவுன் நகைகள் கொள்ளை வழக்கில் 2 பேர் கைது செய்யப்பட்டனர்

Update: 2022-02-04 19:05 GMT
கோட்டைப்பட்டினம்
புதுக்கோட்டை மாவட்டம், கோட்டைப்பட்டினம் அருகே உள்ள கோபாலப்பட்டினத்தை சேர்ந்தவர் ஜாபர்சாதிக். இவர், வெளிநாட்டில் சூப்பர் மார்க்கெட் நடத்தி வருகிறார். இதனால், அவர் அங்கேயே தங்கியுள்ளார். இங்குள்ள வீட்டை உறவினர்கள் பராமரிப்பில் விட்டுள்ளார்.
இந்நிலையில் கடந்த டிசம்பர் மாதம் 27-ந் தேதி இவரது வீட்டில் 750 பவுன் நகைகள் மற்றும் ரூ.50 ஆயிரம் கொள்ளை போனது. சம்பவ இடத்தில் புதுக்கோட்டை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு நிஷா பார்த்திபன் மற்றும் போலீஸ் அதிகாரிகள் விசாரணை நடத்தினர். ஜாபர்சாதிக் உறவினர்களிடமும் தீவிர விசாரணை நடத்தப்பட்டது.
கிணற்றில் இருந்து மீட்பு
 இந்த கொள்ளை சம்பவம் குறித்து மீமிசல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், இதில் ஈடுபட்டவர்களை பிடிக்க 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டன. தனிப்படை போலீசார் அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளை பார்வையிட்டும், பழைய குற்றவாளிகள் மற்றும் உறவினர்களிடம் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தினர்.
 விசாரணையில், ஜாபர்சாதிக் உறவினர்கள் தான் இந்த சம்பவத்தில் ஈடுபட்டு இருக்கக்கூடும் என்று சந்தேகம் அடைந்த போலீசார் மீண்டும் சம்பவ வீட்டை பார்வையிட்டனர். பின்னர் அந்த வீட்டின் வெளிப்புறம் உள்ள கிணற்றில் இருந்த தண்ணீரை வெளியேற்றி பார்த்தபோது ஒரு மூட்டையில் தங்க நகைகள் இருந்தன. அதனை மீட்ட போலீசார் அறந்தாங்கி துணை போலீஸ் சூப்பிரண்டு தினேஷ்குமார் முன்னிலையில், நகை மதிப்பீட்டாளர்கள் மூலம் எடை போட்டு பார்த்ததில் 559 பவுன் நகைகள் இருந்தன.
உறவினர்கள் 2 பேர் கைது
அந்த நகைகளை பறிமுதல் செய்த போலீசார், அதனை கிணற்றுக்குள் மூட்டை கட்டி போட்டது யார்?, மீதி நகைகள் எங்குள்ளது? என்று தொடர்ந்து விசாரணை நடத்தி வந்தனர். விசாரணையில், ஜாபர்சாதிக்கின் உறவினரான அதே பகுதியைச் சேர்ந்த கமருஜமான்(வயது 41) மற்றும் ஆர். புதுப்பட்டினம் பகுதியைச் சேர்ந்த அசாருதீன்(26) ஆகியோர் வீட்டின் பின்பக்க கதவை உடைத்து திருடர்கள் போல உள்ளே நுழைந்து நகைகளை கொள்ளையடித்தது தெரிய வந்தது.
அதன்பேரில், கமருஜமான் மற்றும் அவருக்கு உடந்தையாக இருந்த அசாருதீன் ஆகிய 2 பேரையும் போலீசார் பிடித்து விசாரணை நடத்தினர். அப்போது கமருஜமான் போலீசாரிடம் அளித்த வாக்குமூலத்தில், தான் வெளிநாட்டில் வேலை செய்து வந்ததாகவும், கடந்த ஆண்டு டிசம்பர் மாதத்தில் ஊருக்கு வந்ததும், ஜாபர்சாதிக்கின் வீட்டில் அதிக அளவில் நகைகள் இருப்பதை தெரிந்து கொண்டு, வீட்டின் பின்பக்க கதவை உடைத்து நகைகளை கொள்ளையடித்தேன். அந்த நகைகளை எடுத்துக்கொண்டு சென்னையில் 2 நாட்கள் தங்கிவிட்டு பின்பு வெளிநாட்டிலிருந்து ஊருக்கு வருவதுபோல் வந்தேன். ஆனால், போலீசார் என்னை நெருங்குவதை தெரிந்து கொண்டு பயத்தில் கொள்ளையடித்த நகைகளை மூட்டையாக கட்டி கிணற்றில் போட்டு விட்டேன் என ஒப்புக் கொண்டதாக கூறப்படுகிறது.
 இதனையடுத்து கமருஜமான் மற்றும் அவருக்கு உடைந்தையாக இருந்த அசாருதீன் ஆகிய 2 பேரையும் கைது செய்த போலீசார், அவர்களிடம் இருந்து 9 பவுன் நகைகளை மீட்டனர். பின்னர் அவர்களை, அறந்தாங்கி குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி தஞ்சாவூர் கிளை சிறையில் அடைத்தனர். உறவினர்களே நகைகளை கொள்ளையடித்து விட்டு ஒன்றும் தெரியாதது போல நாடகமாடிய சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் செய்திகள்