கல்லூரி மாணவர்களுக்கு கஞ்சா விற்றவர் கைது

செல்போன் ஆர்டர் மூலம் கல்லூரி மாணவர்களுக்கு கஞ்சா விற்றவர் கைது செய்யப்பட்டார்.

Update: 2022-02-04 18:49 GMT
காரைக்குடி,

காரைக்குடி கல்லூரி மாணவர்களிடையே கஞ்சா போதை பழக்கம் அதிகரித்திருப்பது குறித்தும் அதனால் சட்டம் ஒழுங்கு பிரச்சினைகள் ஏற்படுவது குறித்தும் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு செந்தில்குமாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அவரது உத்தரவின் பேரில் காரைக்குடி துணை போலீஸ் சூப்பிரண்டு வினோஜி மேற்பார்வையில் காரைக்குடி ரவுடிகள் ஒழிப்பு பிரிவு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் தவமுனி தலைமையில் தனிப்படை போலீசார் தீவிர விசாரணையில் ஈடுபட்டனர். விசாரணையில் கோட்டையூர் ரெயில்வே கேட் அருகே அதிகாலையில் கல்லூரி மாணவர்கள் கஞ்சா புகைப்பதை கண்டறிந்தனர்.அவர்களிடம் மாணவர்கள் போல் கஞ்சா கிடைக்குமிடம் குறித்து கேட்டறிந்த போலீசார் அவர்கள் கொடுத்த தகவலின் பேரில் குறிப்பிட்ட செல்போன் எண்ணிற்கு போன் செய்து கஞ்சா கேட்டுள்ளனர்.அவர்களை குறிப்பிட்ட இடத்திற்கு வரச்சொல்லி பணத்தை பெற்றுக்கொண்ட ஒரு வாலிபர் அவர்கள் போலீசார் என்பதையறியாமலேயே ஓர் இடத்தை கூறி அங்கு நிற்குமாறு சொல்லிவிட்டு சென்றார்.சிறிது நேரத்தில் மற்றொரு வாலிபர் மோட்டார் சைக்கிளில் வந்து கஞ்சாவை கொடுத்துள்ளார். அப்போது போலீசார் அவரை சுற்றி வளைத்து கைது செய்தனர். விசாரணையில் அவர் கண்டனூர் பாலையூர் பகுதியைச் சேர்ந்த சதீஷ்குமார் (வயது 21) என்பது தெரிய வந்தது. அவரது வீட்டில் சோதனை நடத்தியபோது ரூ.1 லட்சம் மதிப்பிலான கஞ்சாவை போலீசார் கைப்பற்றினர். மேலும் நடைபெற்ற விசாரணையில் சதீஷ்குமார் சிவகங்கை மாவட்டம் முழுவதும் உள்ள கல்லூரிகளில் படிக்கும் மாணவர்களுக்கு செல்போனில் ஆர்டர் பெற்று கஞ்சா சப்ளை செய்து வருவது தெரியவந்தது. சதீஷ்குமார் காரைக்குடி கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். அவருடன் தொடர்பில் உள்ளவர்களை தேடி வருகிறார்கள்.

மேலும் செய்திகள்