ஆம்னி பஸ் கவிழ்ந்து சென்னையை சேர்ந்தவர் பலி

திருச்சியில் நேற்று காலை ஆம்னி பஸ் கவிழ்ந்து சென்னையை சேர்ந்த ஒருவர் பலியானார். மேலும் 25 பேர் படுகாயம் அடைந்தனர். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Update: 2022-02-04 18:39 GMT
திருச்சி, பிப்.5-
திருச்சியில் நேற்று காலை ஆம்னி பஸ் கவிழ்ந்து சென்னையை சேர்ந்த ஒருவர் பலியானார். மேலும் 25 பேர் படுகாயம் அடைந்தனர். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
பஸ் கவிழ்ந்தது
தூத்துக்குடியில் இருந்து நேற்று முன்தினம் இரவு ஒரு ஆம்னி பஸ் 42 பயணிகளுடன் சென்னைக்கு புறப்பட்டு சென்றது. இந்த பஸ்சை கடலூர் மாவட்டம் பண்ருட்டி சன்னாசிபட்டியை சேர்ந்த டிரைவர் சரவணன் (வயது 52) என்பவர் ஓட்டி வந்தார்.
இந்த ஆம்னி பஸ் நேற்று அதிகாலை 2.45 மணி அளவில் திருச்சி பஞ்சப்பூர் அருகே வந்தபோது, திடீரென்று டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து  சாலை ஓரத்தில் இறங்கி கவிழ்ந்தது. இதில் பஸ்சில் இருந்தவர்கள் பயத்தில் சத்தம் போட்டனர். இதனை பார்த்த பின்னால் வந்த வாகன ஓட்டிகள் உடனே தங்கள் வாகனத்தை  நிறுத்தி கவிழ்ந்த பஸ்சில் இருந்த பயணிகளை மீட்டனர்.
ஒருவர் பலி
இதில் சென்னை அரும்பாக்கம் ஆறுமுகம் நகர் முதல் தெருவை சேர்ந்த ஞானசேகர் (43), என்பவர் சம்பவ இடத்திலேயே பலியானார். மேலும் பஸ்சில் இருந்த 25 பேர் படுகாயம் அடைந்தனர். மற்றவர்கள் லேசான காயத்துடன் தப்பினர்.
இதுகுறித்து தகவல் அறிந்த திருச்சி தெற்கு போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து படுகாயம் அடைந்த பயணிகளை  ஆம்புலன்ஸ் மூலம் திருச்சி அரசு மருத்துவமனைக்கு சிகிக்சைக்காக அனுப்பி வைத்தனர். அவர்களுக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். மேலும் இந்த விபத்து குறித்து போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

மேலும் செய்திகள்