திருமணமான 42 வயது நபருடன் சிறுமி காதல்:அவமானம் தாங்காமல் தாய் தீக்குளித்து தற்கொலை

42 வயதான திருமணமான நபரை 17 வயது சிறுமி காதலித்ததால்,, அவமானம் தாங்காமல் தீக்குளித்து அந்த சிறுமியின் தாய் தற்கொலை செய்து கொண்டார்.

Update: 2022-02-04 18:39 GMT
காரைக்குடி,

42 வயதான திருமணமான நபரை 17 வயது சிறுமி காதலித்ததால்,, அவமானம் தாங்காமல் தீக்குளித்து அந்த சிறுமியின் தாய் தற்கொலை செய்து கொண்டார்.

42 வயது நபருடன் காதல்

சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை பகுதியை சேர்ந்த 17 வயது சிறுமி, நர்சிங் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வருகிறார். இவர் காரைக்குடி தனியார் விடுதியில் தங்கி படித்து வந்தார். 
இந்த நிலையில் இவருக்கும், தேவகோட்டை அருகே உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்த தனியார் மில்லில் வேலை பார்க்கும் 42 வயதான தொழிலாளிக்கும் பழக்கம் ஏற்பட்டது. அந்த ெதாழிலாளிக்கு ஏற்கனவே திருமணம் ஆகி 2 குழந்தைகள் உள்ளனர்.
இந்த நிலையில் அந்த மாணவி கடந்த 1-ந்தேதி விடுதியில் இருந்து மாயமானார். அவர், அந்த 42 வயது நபருடன் சென்றது தெரியவந்தது.
இந்த காதல் விவகாரம் பற்றி அறிந்ததும் மாணவியின் பெற்றோர் காரைக்குடி போலீசில் புகார் செய்தனர். அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தி, மாயமான மாணவியை மீட்டு பெற்றோரிடம் ஒப்படைத்தனர். அந்த தொழிலாளியையும் ேபாலீசார் கண்டித்தனர்.

தீக்குளித்து தற்கொலை

இந்த நிலையில் மாணவியை பெற்றோர் தனது வீட்டுக்கு அழைத்து வந்திருந்தனர். ஏற்கனவே திருமணமானவருடன் மாணவி சென்றது, அவருடைய தாயாருக்கு மிகுந்த மனஉளைச்சலை கொடுத்தது. அக்கம்பக்கத்தினர் தன்னை தவறாக பேசுவார்களே என்று மனம் உடைந்து காணப்பட்டார். 
இந்த நிலையில் நேற்று காலை வீட்டில் வேறு யாரும் இல்லாத போது மாணவியின் தாயாரான 42 வயது பெண், மண்எண்ணெயை உடலில் ஊற்றி தீக்குளித்தார். இதில் உடல் கருகி அலறிய அவரை, அக்கம், பக்கத்தினர் ஓடி வந்து தீயை அணைத்து மீட்டு சிகிச்சைக்காக தேவகோட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு முதலுதவி சிகிச்சைக்கு பிறகு மேல் சிகிச்சைக்காக அவரை மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு வரப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக இறந்தார்.
இது குறித்து மாணவியின் தந்தை தேவகோட்டை டவுன் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் மகளிர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்