வேலூரில் பெண்ணிடம் 7 பவுன் சங்கிலி பறிப்பு

வேலூரில் பெண்ணிடம் 7 பவுன் தங்கச்சங்கிலியை பறித்துச் சென்ற மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.;

Update: 2022-02-04 18:00 GMT
வேலூர்

வேலூரில் பெண்ணிடம் 7 பவுன் சங்கிலியை பறித்துச் சென்ற மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

கண்டக்டர் மனைவி

வேலூர், சாய்நாதபுரம் எல்.ஐ.சி. காலனியை சேர்ந்தவர் அருள். சீர்காழியில் அரசு பஸ் கண்டக்டராக பணியாற்றி வருகிறார். இவரது மனைவி ரேணுகாதேவி (வயது 53). இவர் நேற்று முன்தினம் இரவு 9 மணி அளவில் தனது மகனுடன் ஓட்டேரி டி.கே.எம்.கல்லூரி செல்லும் சாலையில் கடைக்கு மோட்டார்சைக்கிளில் சென்றார். 

கடையில் பொருட்கள் வாங்கிவிட்டு வீட்டுக்கு புறப்பட்டனர். அப்போது அவர்களை பின்தொடர்ந்து மோட்டார்சைக்கிளில் 2 மர்ம நபர்கள் வந்தனர். அவர்களில் பின்னால் அமர்ந்திருந்த நபர் திடீரென ரேணுகாதேவியின் கழுத்தில் கிடந்த 8 பவுன் சங்கிலியை பறிக்க முயன்றார். உடனடியாக சுதாரித்துக்கொண்ட அவர் சங்கிலியை இறுக்கமாக பிடித்துக் கொண்டார்.

7 பவுன் சங்கிலி பறிப்பு

இதையடுத்து அந்த மர்மநபர் சங்கிலியை வேகமாக இழுத்தார். அப்போது சங்கிலி அறுந்து சுமார் 1 பவுன் ரேணுகாதேவியின் கையில் சிக்கிக் கொண்டது. மீதம் உள்ள 7 பவுன் சங்கிலி மர்மநபர் கையில் சிக்கியது.  அதனுடன் மர்மநபர்கள் அங்கிருந்து மின்னல்வேகத்தில் தப்பிச் சென்றனர். 

இதுகுறித்து ரேணுகாதேவி பாகாயம் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன் வழக்குப்பதிவு செய்து மர்மநபர்களை வலைவீசி தேடி வருகிறார்.

மேலும் செய்திகள்