திருப்பத்தூர், ராணிப்பேட்டை மாவட்டங்களில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் 2,335 பேர் வேட்புமனு தாக்கல்
திருப்பத்தூர், ராணிப்பேட்டை மாவட்டங்களில் நடைபெறும் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட 2,335 பேர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர்.
திருப்பத்தூர்
திருப்பத்தூர், ராணிப்பேட்டை மாவட்டங்களில் நடைபெறும் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட 2,335 பேர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர்.
வேட்புமனு தாக்கல்
திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள திருப்பத்தூர், ஜோலார்பேட்டை, வாணியம்பாடி, ஆம்பூர் ஆகிய 4 நகராட்சிகளில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான வேட்புமனுதாக்கல் நடைபெற்று வந்தது. நேற்று கடைசி நாள் என்பதால் அனைத்து நகராட்சி மற்றும் பேரூராட்சிகளில் அரசியல் கட்சியினர் தங்களது ஆதரவாளர்களுடன் கூட்டம், கூட்டமாக சென்று வேட்புமனு தாக்கல் செய்தனர். இதனால் அனைத்து நகராட்சி மற்றும் பேரூராட்சிகளிலும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.
திருப்பத்தூர் மாவட்டத்தில் ஆம்பூர் நகராட்சியில் 210 பேரும், வாணியம்பாடி நகராட்சியில் 292 பேரும், திருப்பத்தூர் நகராட்சியில் 219 பேரும், ஜோலார்பேட்டை நகராட்சியில் 123 பேரும், ஆலங்காயம் பேரூராட்சியில் 63 பேரும், உதயேந்திரம் பேரூராட்சியில் 64 பேரும், நாட்டறம்பள்ளி பேரூராட்சியில் 71 பேரும் என மொத்தம் 1,042 பேர் வேட்புமனு தாக்கல் செய்து உள்ளனர்.
ராணிப்பேட்டை
ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள 6 நகராட்சிகள் மற்றும் 8 பேரூராட்சிகளில் நடைபெறும் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட கடைசி நாளான நேற்று 541 பேர் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனர். அரக்கோணம் நகராட்சியில் 83 பேர், ஆற்காடு நகராட்சியில் 42 பேர், மேல்விஷாரம் நகராட்சியில் 39 பேர், ராணிப்பேட்டை நகராட்சியில் 28 பேர், சோளிங்கர் நகராட்சியில் 86 பேர், வாலாஜா நகராட்சியில் 58 பேர் என மொத்தம் 335 பேர் வேட்புமனு தாக்கல் செய்தனர்.
அதேபோல், அம்மூர் பேரூராட்சியில் 19 பேர், கலவை பேரூராட்சியில் 27 பேர், காவேரிப்பாக்கம் பேரூராட்சியில் 26 பேர், நெமிலி பேரூராட்சியில் 37 பேர், பனப்பாக்கம் பேரூராட்சியில் 36 பேர், தக்கோலம் பேரூராட்சியில் 21 பேர், திமிரி பேரூராட்சியில் 24 பேர், விளாப்பாக்கம் பேரூராட்சியில் 16 பேர் என மொத்தம் 206 பேர் வேட்புமனு தாக்கல் செய்தனர்.
மாவட்டம் முழுவதும் இதுவரை நகராட்சிகளில் 846 பேர், பேரூராட்சிகளில் 447 பேர் என மொத்தம் 1,293 பேர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர்.
இரண்டு மாவட்டங்களிலும் சேர்த்து 2,335 பேர் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனர்.