திருப்பத்தூர் அருகே முதியவரை கத்தியால் குத்தி நகை, பணம் கொள்ளை
திருப்பத்தூர் அருகே முதியவரை கத்தியால் குத்தி நகை, பணத்தை கொள்ளையடித்த மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
திருப்பத்தூர்
திருப்பத்தூர் அருகே முதியவரை கத்தியால் குத்தி நகை, பணத்தைக் கொள்ளையடித்த மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
சுவிட்சை ஆப் செய்து..
திருப்பத்தூர் மாவட்டம் குரும்பேரியை அடுத்த கொல்லக் கொட்டாய் பகுதியைச் சேர்ந்தவர் குப்புசாமி (வயது 75). இவருடைய மனைவி சரோஜா (70). இவர்களின் மகள் கல்யாணி (45). இவருக்கு, கிருஷ்ணகிரி மாவட்டம் மகனுர்பட்டிப்பள்ளியைச் சேர்ந்த சக்திவேல் என்பவருடன் திருமணம் ஆகி உள்ளது. கல்யாணி, சிங்காரப்பேட்டை அரசு பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றி வருகிறார். 2 நாட்களுக்கு முன்பு கல்யாணி ெபற்றோரை பார்க்க குரும்பேரிக்கு வந்தார்.
நேற்று முன்தினம் இரவு 12 மணியளவில் மர்மநபர்கள் 4 பேர் குப்புசாமியின் வீட்டுக்கு வந்து, மின்சாரப்பெட்டியின் மெயின் சுவிட்சை ஆப் செய்து, தாங்கள் வைத்திருந்த செல்போன் விளக்கு வெளிச்சத்தில் வீட்டுக்குள் நுழைந்தனர்.
கொள்ளை
வீட்டில் இருந்த குப்புசாமியிடம் பணம் கேட்டுள்ளனர். அவர் தன்னிடம் பணம் எதுவும் இல்லை, என்றார். உடனே ஆத்திரம் அடைந்த மர்ம நபரில் ஒருவன் தான் வைத்திருந்த கத்தியால் குப்புசாமியை லேசாக குத்தினார். இதனால் பயந்த சரோஜா மற்றும் மகள் கல்யாணி ஆகியோர் தான் அணிந்திருந்த 4 பவுன் நகைகளை கழற்றி மர்ம நபர்களிடம் கொடுத்துள்ளனர். மேலும் பீரோவில் வைத்திருந்த ரூ.5 ஆயிரம் மற்றும் 2 செல்போன்களை மர்மநபர்கள் கொள்ளையடித்துச் சென்றனர்.
அக்கம் பக்கத்தினர் உதவியோடு குப்புசாமியை மீட்டு திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். பின்னர் மேல்சிகிச்சைக்காக தர்மபுரி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.
வலைவீச்சு
இதுகுறித்து குப்புசாமி கொடுத்த புகாரின்பேரில் திருப்பத்தூர் தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். முதியவரை கத்தியால் குத்தி தங்க நகைகளை கொள்ளையடித்துச் சென்ற மர்ம நபர்களை போலீசார் தனிப்படை அமைத்து வலைவீசி தேடி வருகின்றனர்.