புனேயில், கட்டுமான பணியின் போது துயரம் கட்டிடத்தின் மேல்தளம் சரிந்துவிழுந்து 5 தொழிலாளிகள் பலி

புனேயில் புதிதாக கட்டப்பட்டு வந்த கட்டிடத்தின் மேல் தளம் சரிந்து விழுந்ததில் 5 தொழிலாளிகள் உயிரிழந்தனர்.;

Update: 2022-02-04 17:48 GMT
கோப்பு படம்
புனே, 
புனேயில் புதிதாக கட்டப்பட்டு வந்த கட்டிடத்தின் மேல் தளம் சரிந்து விழுந்ததில் 5 தொழிலாளிகள் உயிரிழந்தனர். பலியானவர்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.
மேல்தளம் சரிந்தது
புனே ஏரவாடா சாஸ்திரி நகர் பகுதியில் புதிதாக கட்டிடம் ஒன்று கட்டப்பட்டு வருகிறது. மேல்தளம் கட்டுமான பணிக்கு சென்ட்ரிங் வேலை முடிந்து, கான்கிரீட் போடும் பணி  நடந்தது. இந்த பணியில் 10-க்கும் மேற்பட்ட தொழிலாளிகள் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது, ‘பீம்' வளைந்து, கான்கிரீட் தளம் திடீரென சரிந்து விழுந்தது. இதில், பணியில் இருந்த தொழிலாளர்கள் இடிபாடுகளுக்குள் சிக்கிக்கொண்டனர். 
இந்த பார்த்து அதிர்ச்சி அடைந்த சக தொழிலாளர்கள் சம்பவம் குறித்து உடனடியாக போலீசாருக்கும், தீயணைப்பு படையினருக்கு தகவல் கொடுத்தனர். 
5 தொழிலாளிகள் பலி
இதன்பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு படையினர் மற்றும் போலீசார் இடிபாடுகளில் சிக்கிய தொழிலாளர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். 
இதில், இடிபாடுகளில் இருந்து 5 தொழிலாளர்கள் பிணமாக மீட்கப்பட்டனர். மேலும் படுகாயங்களுடன் உயிருக்கு போராடிக்கொண்டு இருந்த 5 தொழிலாளிகளை மீட்டு சிகிச்சைக்காக ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். 
அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. விபத்தில் பலியான 5 பேரின் உடல்களை போலீசார் மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
3 பேர் கைது
இதற்கிடையே கட்டிடம் இடிந்து விழுந்த சம்பவம் பற்றி தகவல் அறிந்த புனே போலீஸ் கமிஷனர் அமிதாப் குப்தா, மாநகராட்சி கமிஷனர் குணார் குமார் ஆகியோர் நேரில் சென்று மீட்பு பணிகளை பார்வையிட்டனர். இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்த மாவட்ட கலெக்டர் மேற்பார்வையில் குழு அமைக்கப்பட்டு உள்ளது. 
இந்த விபத்து குறித்து புனே போலீஸ் கமிஷனர் அமிதாப் குப்தா கூறுகையில், கட்டுமான தவறுகள் காரணமாக இந்த விபத்து நடந்தது தெரியவந்துள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக ஒப்பந்ததாரர் மீது வழக்கு பதிவு செய்து, 3 பேரை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறோம், என்றார். 
மோடி இரங்கல்
இந்தநிலையில் புனே கட்டிட விபத்தில் இறந்தவர்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்து உள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், “புனேயில் கட்டிடம் இடிந்து விழுந்த விபத்தில் 5 பேர் பலியான சம்பவம் குறித்து அறிந்து மிகுந்த வேதனை அடைந்தேன். உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு எனது இரங்கலை தெரிவித்து கொள்கிறேன். இந்த விபத்தில் காயமடைந்த அனைவரும் விரைவில் குணமடைவார்கள் என்று நம்புகிறேன்” என பதிவிட்டுள்ளார். 

மேலும் செய்திகள்