கோவில் பணியாளர்களை 3 ஆண்டுக்கு ஒருமுறை இடமாற்றும் அறிவிப்புக்கு தடை
கோவில் பணியாளர்களை 3 ஆண்டுக்கு ஒருமுறை இடமாற்றும் அறிவிப்புக்கு தடை விதித்து மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டது.;
மதுரை,
கோவில் பணியாளர்களை 3 ஆண்டுக்கு ஒருமுறை இடமாற்றும் அறிவிப்புக்கு தடை விதித்து மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டது.
சட்டத்திருத்தம்
மதுரையை சேர்ந்த சுதர்சனம், மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:-
தமிழ்நாடு இந்து சமய அறநிலையத்துறை சட்டம் 1959-ன்கீழ் பெரும்பாலான கோவில்கள் கொண்டு வரப்பட்டு உள்ளன. அறநிலையத்துறையில் ஏராளமானவர்கள் பல்வேறு நிலைகளில் பணியாற்றி வருகின்றனர். இந்த சட்டத்தின்படி, ஒரு கோவிலில் பணியாற்றும் பணியாளரை வேறொரு கோவிலுக்கு இடமாறுதல் செய்வதானால், சம்பந்தப்பட்ட 2 கோவில் நிர்வாகமும் அனுமதிக்கும்பட்சத்தில் அவரை இடமாற்றம் செய்யலாம்.
இதுபோல பணியாளர்கள் சம்பந்தமாக பல்வேறு விதிமுறைகள் வகுக்கப்பட்டு உள்ளன.
இந்தநிலையில் இந்த விதிமுறைகளுக்கு புறம்பாக இந்த சட்டத்தில் கடந்த ஆண்டு திருத்தம் செய்யப்பட்டு உள்ளது. அதாவது, அறநிலையத்துறையின்கீழ் உள்ள கோவில்களில் பணியாற்றும் பணியாளர்களை இடமாற்றம் செய்வது, அறநிலையத்துறை கமிஷனரின் நடவடிக்கைக்கு கட்டுப்பட்டது என்பதாகும்.
பணியாளர்கள் கட்டாய இடமாற்றம்
இந்த சட்ட திருத்தத்தின்படி, கடந்த மாதம் அறநிலையத்துறை கமிஷனர் ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அதில், அறநிலையத்துறையின்கீழ் தமிழகம் முழுவதும் உள்ள கோவில்களில் பணியாற்றுபவர்கள் அனைவரும் கட்டாயம் 3 ஆண்டுக்கு ஒருமுறை இடமாற்றம் செய்யப்பட வேண்டும். அதன்படி ஒரு கோவிலில் பணியாற்றும் அர்ச்சகர்கள் முதல் அலுவலக உதவியாளர் வரை அனைவரும் இடமாற்றத்தின்கீழ் கொண்டு வரப்படுகிறார்கள். இது ஏற்கத்தக்கதல்ல. இந்த அறிவிப்பின்கீழ் உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டால் கோவில்களில் பல்வேறு பணிகள் பாதிக்கப்படும் அபாயம் உள்ளது.
எனவே கோவில்களில் பணியாற்றும் அனைவரையும் இடமாற்றம் செய்யும் வகையில் உள்ள சட்டத்திருத்தம் மற்றும் அறிவிப்புக்கு இடைக்கால தடை விதிக்க வேண்டும். இவற்றை ரத்து செய்து உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு மனுவில் கூறியிருந்தார்.
இடைக்கால தடை
இந்த மனு நீதிபதி புஷ்பா சத்தியநாராயணா, வேல்முருகன் ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்தது.
அப்போது மனுதாரர் வக்கீல் வி.ஆர்.சண்முகநாதன் ஆஜராகி, கோவில்களில் பணியாளர்கள் சம்பந்தமான நடவடிக்கைகளை எடுப்பதற்கு அந்தந்த கோவில் அறங்காவலர் குழுவிற்குத்தான் அதிகாரம் உள்ளது. ஆனால் அறநிலையத்துறை கமிஷனருக்கு அதிகாரம் அளித்து சட்டத்திருத்தம் கொண்டு வந்தது, 1959-ம் ஆண்டு கொண்டு வரப்பட்ட அறநிலையத்துறையின் பிரதான சட்டத்துக்கு எதிரானது. இதனை உடனடியாக ரத்து செய்ய வேண்டும் என்று வாதாடினார்.
விசாரணை முடிவில், அறநிலையத்துறைக்கு உள்பட்ட கோவில் பணியாளர்கள் இடமாற்ற விதிகள் தொடர்பான அரசாணை மற்றும் அறிவிப்புக்கு இடைக்கால தடை விதித்து நீதிபதிகள் உத்தரவிட்டனர். இந்த வழக்கை வருகிற 21-ந்தேதிக்கு ஒத்திவைத்தனர்.