சங்கராபுரம் பேரூராட்சி தலைவர் பதவியை கைப்பற்றப்போகும் முதல் பெண் தலைவர் யார்

சங்கராபுரம் பேரூராட்சி தலைவர் பதவியை கைப்பற்றப்போகும் முதல் பெண் தலைவர் யார்

Update: 2022-02-04 17:17 GMT
1926-ம் ஆண்டு ஊராட்சியாக அறிவிக்கப்பட்ட சங்கராபுரம், 1984-ம் ஆண்டு தேர்வு நிலை பேரூராட்சியாக தரம் உயர்த்தப்பட்டு இன்று வரை செயல்பட்டு வருகிறது. பேரூராட்சி மொத்த பரப்பளவு 11.6 சதுர கிலோ மீட்டர் ஆகும். 
இப்பேரூராட்சியில் அரசு மருத்துவமனை, அரசு பாலிடெக்னிக், அரசு தொழிற்பயிற்சி நிலையம், ஊராட்சி ஒன்றிய அலுவலகம், வேளாண்மை அலுவலகம், நுகர்பொருள் வாணிபக்கழகம், போலீஸ் நிலையம், சார்பதிவாளர் அலுவலகம், வருவாய் ஆய்வாளர் அலுவலகம், கிராம நிர்வாக அலுவலர் அலுவலகம், கால்நடை மருத்துவமனை, 8 அரசு மற்றும் தனியார் பள்ளிக்கூடங்கள், தீயணைப்பு நிலையம், 5 பொதுத்துறை வங்கிகள் ஆகியவை உள்ளன. 2011-ம் ஆண்டின் நிலவரப்படி சங்கராபுரம் பேரூராட்சியின் மக்கள் தொகை 15 ஆயிரத்து 664 ஆகும்.
பொதுப்பிரிவு (பெண்கள்)
கடந்த முறை சங்கராபுரம் பேரூராட்சியில் நடந்த உள்ளாட்சி தேர்தலில் அ.தி.மு.க.-வை சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி வெற்றி பெற்று தலைவராக பதவி வகித்தார். துணைத்தலைவராக கலைவாணி கோவிந்தன் இருந்தார். 
இங்கு மொத்தம் உள்ள 15 வார்டுகளில் 1,3,5,9,11,13 வார்டுகள் பொது பிரிவுக்கும், 2,4,6,8,10,12,15 வார்டுகள் பெண்கள்(பொது) பிரிவுக்கும், 7- வது வார்டு ஆதிதிராவிடர் பெண்ணுக்கும், 14-வது வார்டு ஆதிதிராவிடர்(பொது) பிரிவுக்கும் ஒதுக்கப்பட்டுள்ளது. 
மக்களின் எதிர்பார்ப்புகள்
சங்கராபுரம் பேரூராட்சியில் கழிவுநீர் செல்வதற்கு கட்டமைப்பு வசதிகள் ஏற்படுத்த வேண்டும், போக்குவரத்து நெரிசலை தவிர்க்க சாலையோர ஆக்கிரமிப்புகளை பாரபட்சமின்றி அகற்றிவிட்டு சாலைகளை விரிவாக்கம் செய்ய வேண்டும், கழிவுநீர் கால்வாய்களை தூர்வாரி பேரூராட்சியை தூய்மையாக பராமரிக்க வேண்டும், அடிப்படை வசதிகள் செய்து தர வேண்டும் என்பது பொதுமக்களின் கோரிக்கையாக உள்ளது. தேர்தலில் வெற்றி பெறுபவர்கள் மேற்கண்ட கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்றி தர வேண்டும் என்பதே மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.
கைப்பற்றப்போவது யார்?
இந்த பேரூராட்சியை இதுவரை தி.மு.க. 3 முறையும், அ.தி.மு.க. 2 முறையும் என மாறி மாறி கைப்பற்றி உள்ளது. இதுவரை நடந்த தேர்தல்களில் பேரூராட்சி தலைவர் பதவியை ஆண்கள் மட்டுமே அலங்கரித்து வந்த நிலையில் 35 ஆண்டுகளுக்கு பிறகு தற்போது முதல் முறையாக பேரூராட்சி தலைவர் பதவி பெண்கள்(பொது) பிரிவினருக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. இதனால் பேரூராட்சி தலைவர் பதவியை கைப்பற்ற போகும் முதல் பெண் யார்? என்ற எதிர்பார்ப்பு அரசியல் கட்சியினர் மத்தியில் மட்டுமின்றி பொதுமக்கள் மத்தியிலும் உள்ளது. முதல் பெண் தலைவர் என்பதால் சங்கராபுரம் பேரூராட்சி தேர்தலில் ஆளும் கட்சியான தி.மு.க., எதிர்காட்சியான அ.தி.மு.க. இடையே கடும் போட்டி இருப்பதால் தேர்தல் களம் சூடு பிடித்துள்ளது.

மேலும் செய்திகள்