தினத்தந்தி புகார் பெட்டி மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள்

தினத்தந்தி புகார் பெட்டிக்கு 99628 18888 என்ற வாட்ஸ்-அப் எண்ணுக்கு வந்த மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் விவம் வருமாறு:-

Update: 2022-02-04 17:07 GMT
தினத்தந்தி புகார் பெட்டிக்கு 99628 18888 என்ற வாட்ஸ்-அப் எண்ணுக்கு வந்த மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் விவம் வருமாறு:- 

கட்டிடக்கழிவுகளால் அவதி 

ஊட்டியில் உள்ள நகராட்சி அலுவலகத்தில் இருந்து மார்க் கெட்டுக்கு வரும் நடைபாதையில் அதிகளவில் கட்டிட கழிவுகள் கொட்டப்பட்டு உள்ளன. இதனால் இந்த வழியாக செல்லும் மாணவ மாணவிகள் மற்றும் பொதுமக்கள் பெரிதும் அவதியடைந்து வருகிறார்கள். எனவே அதிகாரிகள் உடனடி நடவடிக்கை எடுத்து நடைபாதையில் கட்டிடக்கழிவுகள் கொட்டப்படுவதை தடுக்க வேண்டும்.
பழனிகுமார், ஊட்டி.

ஆபத்தான மரம்

  கோவை ராஜவீதியில் மாநகராட்சி சுகாதார மையம் உள்ளது. இதன் அருகே ஒரு மரம் விழும் நிலையில் மிகவும் ஆபத்தான நிலையில் நிற்கிறது. மேலும் மரத்தின் வழியாக மின்வயர்களும் செல்கின்றன. எனவே மரம் சாய்ந்து பெரிய பாதிப்பை ஏற்படுத்தும் முன்பு அங்கு நிற்கும் ஆபத்தான மரத்தை வெட்டி அகற்ற வேண்டும்.
  குமார், ராஜவீதி.

நீர்நிலைகளில் வீசப்படும் முகக்கவசம்

  கூடலூர் பகுதியில் உள்ள ஆற்று வாய்க்கால்களில் பொது மக்கள் பயன்படுத்திய முகக்கவசங்கள் அதிகளவில் வீசப்படுகிறது. குறிப்பாக மேல் கூடலூர் ஆற்று வாய்க்கால், பாண்டியாறு உள் பட பெரும்பாலான நீர்நிலையில் முகக்கவசங்கள் அதிகளவில் காணப்படுகிறது. இதனால் குடிநீர் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு வருகிறது. எனவே அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து பொது இடங்களில் முகக்கவசங்களை வீசுவதை தடுக்க வேண்டும்.
  சரவணன், கூடலூர்.

தடுப்பணையில் மருத்துவ கழிவுகள்

  சுல்தான்பேட்டை ஒன்றியம் செஞ்சேரியில் இருந்து செஞ்சேரி மலை செல்லும் வழியில் சிறு தடுப்பணை உள்ளது. இங்கு, இருபக்கமும் பிளாஸ்டிக்கழிவுகள், கோழிக்கழிவுகள் மற்றும் மருத்துவக்கழிவுகள் தொடர்ந்து கொட்டப்பட்டு வருகிறது. இதன் காரணமாக அந்தப்பகுதியில் கடும் துர்நாற்றம் வீசுவதுடன், சுகாதாரக்கேடு ஏற்படும் அபாயமும் நீடித்து வருகிறது. எனவே அதிகாரிகள் உடனடி நடவடிக்கை எடுத்து இங்கு கழிவுகள் கொட்டுவதை தடுக்க வேண்டும்.
  குமாரவேல், சுல்தான்பேட்டை.

வீணாக செல்லும் குடிநீர்

  கோவை பாலசுந்தரம் சாலையில் பி.ஆர்.எஸ். மைதானம் முன்பு குழாயில் உடைப்பு ஏற்பட்டு கடந்த 3 நாட்களாக தண்ணீர் வீணாக சாலையில் செல்கிறது. இதனால் அந்த இடத்தில் தண்ணீர் இருப்பதால் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் பெரிதும் அவதியடைந்து வருகிறார்கள். எனவே விபத்துகள் ஏற்படுவதற்கு முன்பு குடிநீர் குழாய் உடைப்பை சரிசெய்ய வேண்டும்.
  ரவி, கோவை.

ஒளிராத மின்விளக்குகள்

  கோவை ஆர்.எஸ்.புரம் டி.பி. ரோட்டில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் போடப்பட்ட மின்விளக்குகள் சரியாக ஒளிருவது இல்லை. இதனால் இரவு நேரத்தில் அங்கு இருள் சூழ்ந்து இருப்பதால் இந்த வழியாக செல்பவர்கள் பெரிதும் அவதியடைந்து வருகிறார்கள். அத்துடன் இரவில் சமூக விரோத செயல்களும் நடக்க வாய்ப்பு உள்ளது. எனவே அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து ஒளிராத மின்விளக்குகளை ஒளிர செய்ய வேண்டும்.
  சண்முகராஜா, ஆர்.எஸ்.புரம்.

வேகத்தடை வேண்டும்

  கோவை திருச்சி ரோட்டில் உள்ள சிங்காநல்லூர் சந்தாநகர் ரோடு, சூர்யா கார்டனில் உள்ள சாலையில் வாகனங்கள் அதிவேகமாக செல்கின்றன. இதனால் இந்தப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டு வருகிறார்கள். அத்துடன் எந்த நேரத்திலும் விபத்து ஏற்படும் அபாயம் நீடித்து வருவதால், உடனடியாக அங்கு வேகத்தடை அமைக்க அதிகாரிகள் வழிவகை செய்ய வேண்டும்.
  அசோக்குமார், சிங்காநல்லூர்.

நிழற்குடை இல்லை

  கோவையை அடுத்த தொண்டாமுத்தூர் அருகே உள்ள போளுவாம்பட்டி சாலையில் 56-வது பஸ் நிற்கும் இடத்தில் நிழற்குடை வசதி இல்லை. இதனால் இங்கு பஸ்சுக்காக காத்திருக்கும் பயணிகள் வெயில் மற்றும் மழை நேரத்தில் பெரிதும் அவதியடைந்து வருகிறார்கள். குறிப்பாக மாணவர்கள் பெரிதும் சிரமம் அடைந்து வருகிறார்கள். எனவே அதிகாரிகள் உடனடி நடவடிக்கை எடுத்து இந்த பகுதியில் நிழற்குடை அமைத்து கொடுக்க வேண்டும்.
  சுப்பிரமணியம், தொண்டாமுத்தூர்.

சேதமடைந்த நடைபாதை

  கோவை ரெயில் நிலைய சாலையோர நடைபாதை மிகவும் சேதமடைந்து காணப்படுகிறது. இந்த நடைபாதை வழியாக தினமும் ஏராளமான பொதுமக்கள் மற்றும் மாணவ-மாணவிகள் சென்று வருகிறார்கள். நடைபாதை சிதிலடைந்து இருப்பதால் அவர்கள் பெரிதும் சிரமத்துடன் செல்லும் நிலை நீடித்து வருகிறது. எனவே அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து இந்த நடைபாதையை சீரமைக்க வேண்டும். 
  செல்லத்துரை, டவுன்ஹால்.

தினத்தந்தி செய்தி எதிரொலி:
குப்பைகள் சுத்தம் செய்யப்பட்டது

  கோவை மாநகராட்சிக்கு உட்பட்ட 5-வது வார்டு கரட்டுமேடு வி.கே.வி.நஞ்சப்பாநகர் பகுதியில் குப்பைகள் குவிந்து கிடந்தது. இதனால் அந்தப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் பெரிதும் அவதியடைந்து வந்தனர். இது குறித்து தினத்தந்தி புகார் பெட்டி பகுதியில் செய்தி வெளியிடப்பட்டது. அதன்பேரில் அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து குப்பைகளை சுத்தம் செய்தனர். எனவே செய்தி வெளியிட்ட தினத்தந்திக்கும், நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கும் நன்றி.
  பிரகாஷ், கரட்டுமேடு.
  

மேலும் செய்திகள்