விலங்குகளுக்கு கொரோனா தொற்று இ்ல்லாததால் வண்டலூர் உயிரியல் பூங்கா இன்று முதல் திறப்பு

விலங்குகளுக்கு கொரோனா தொற்று இ்ல்லாததால் வண்டலூர் உயிரியல் பூங்கா இன்று முதல் திறக்கப்படுகிறது.

Update: 2022-02-03 10:59 GMT
சென்னை அடுத்த வண்டலூரில் உள்ள அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவில் பணிபுரியும் அதிகாரிகள், ஊழியர்கள் உள்பட 75 பேருக்கு கொரோனா தொற்று கடந்த மாதம் உறுதி செய்யப்பட்டது. இதனைதொடர்ந்து விலங்குகளின் பாதுகாப்பை கருதி முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கடந்த மாதம் 17-ந்தேதி முதல் 31-ந் தேதி வரை வண்டலூர் உயிரியல் பூங்கா மூடப்படும் என்று பூங்கா நிர்வாகம் ஏற்கனவே அறிவித்தது.

இதற்கிடையே பூங்காவில் உள்ள சிங்கம், புலி, சிறுத்தை உள்பட 21 பூனை இனங்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. பரிசோதனை முடிவில் 11 சிங்கங்கள், 6 புலிகள், 4 சிறுத்தைகள் ஆகிய விலங்குகளுக்கு தொற்று இல்லை என்பது உறுதியானது. இருப்பினும் நேற்று வரை பூங்கா திறக்கப்படவில்லை.

இந்த நிலையில் பூங்கா நிர்வாகம் நேற்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

வண்டலூர் உயிரியல் பூங்கா மத்திய, மாநில அரசுகளின் வழிகாட்டி நெறிமுறைகளைப் பின்பற்றி பார்வையாளர்களுக்கு இன்று (வியாழக்கிழமை) முதல் திறக்கப்படுகிறது. அனைத்து பார்வையாளர்களும் பூங்கா நிர்வாகத்தால் அறிவுறுத்தப்பட்ட கொரோனா தொற்று கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை பின்பற்றுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்